Published : 06 May 2023 01:57 PM
Last Updated : 06 May 2023 01:57 PM

கருவில் இருந்த சிசுவுக்கு மூளை அறுவை சிகிச்சை - அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் தாயின் கருவில் இருந்த சிசுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

மருத்துவ உலகில் நாளும் பல சாதனைகளை மருத்துவர்கள் புரிந்து வருகின்றனர். அந்தவகையில் மற்றுமொரு சாதனை அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பாஸ்டனில் உள்ள மருத்துவமனையில் தனது 34 வது வார கர்ப்ப கால பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். அப்போது வயிற்றில் இருக்கும் அவரது குழந்தைக்கு மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்தும் செல்லும் நாளங்கள் வளர்ச்சி அடையாமல் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மூளையில் ஏற்படும் இந்த வகையிலான பாதிப்பை மருத்துவர்கள் Vein of Galen malformation என்று குறிப்பிடுகின்றனர். இந்த பாதிப்பு குறித்து மருத்துவர் ஆர்பாக் கூறும்போது, "இந்த நிலையில் உள்ள அனைத்து குழந்தைகளும் 50% முதல் 60 % உடனடியாக மிகவும் நோய்வாய்ப்படும். மேலும், அவர்களுக்கு 40 சதவிகித இறப்பு விகிதம் இருப்பதாகத் தெரிகிறது. உயிர் பிழைக்கும் குழந்தைகளில் பாதி பேர் கடுமையான நரம்பியல் மற்றும் அறிவாற்றல் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள்“ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அக்குழந்தைக்கு தாயின் வயிற்றிலே அறுவை சிகிச்சை செய்ய பாஸ்டனில் உள்ள டேரன் ஆர்பாக் தலைமையிலான மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து வெற்றிக்கரமாக சிசுவுக்கு மருத்துவர்கள் அறுவைச் செய்து முடித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்குழந்தை பிறந்தது. டென்வர் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை தற்போது நலமாக உள்ளது.

இந்த அறுவை சிகிச்சை காரணமாக, மூளை மற்றும் இதய நோயால் குழந்தை பாதிக்கப்படாமல் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாயின் வயிற்றில் உள்ள சிசுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடப்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x