Published : 22 Mar 2023 01:57 PM
Last Updated : 22 Mar 2023 01:57 PM
மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புதின் கூறும்போது, "சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் பகுதிக்கு புதின் திடீரென பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் மரியுபோலில் மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனையை அவர் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
உக்ரைன் போரின் பின்னணி: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இப்போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT