Published : 03 Jul 2014 10:00 AM
Last Updated : 03 Jul 2014 10:00 AM
இலங்கையில் ஆளுத்கம நகரில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்படும் பொது பல சேனா அமைப்பின் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை அமெரிக்கா ரத்து செய்தது.
இந்த தகவலை பொது பல சேனா அமைப்பு வெளியிட்டது. 5 ஆண்டு காலத்துக்கு செல்லுபடியாகக் கூடியது இந்த விசா. விசா ரத்து தகவலை கடந்த வாரம் பொது பலசேனா அமைப்பின் செயலர் கலகோதத்த ஞானசாராவிடம் தூதரகம் தெரிவித்தது.
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை
இந்த மாதத் தொடக்கத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஆளுத்கம நகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் 4 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். பல வீடுகளும் வணிக நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து சில தினங்கள் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த வகுப்பு மோதலை தூண்டியதில் தேசியவாத பொது பல சேனா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டிலிருந்து முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றுவதாக பொது பல சேனா அமைப்பு மீது புகார் உள்ளது.
இணையதளங்கள் மீது நடவடிக்கை
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமுக வலைதளங்களில் இலங்கைக்கு எதிரான வெறுப்பூட்டும் கருத்துகள் வெளியாவதால் அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் படிசட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபயராஜபக்சே.
முஸ்லிம்களை புனிதப் போராளிகள் என சிலர் முன்னிறுத்துகின்றனர். இது தவறானது. இத்தகைய கருத்துகள் பரவுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றார் கோத்தபய.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT