Published : 15 Jul 2014 12:31 PM
Last Updated : 15 Jul 2014 12:31 PM
அர்ஜென்டீனா உடனான இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி'யை பறைசாற்றும் அஞ்சல்தலையை ஜெர்மனி நாடு அச்சடித்திருக்கிறது.
இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது,
கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்கான நினைவாக அஞ்சல்தலை ஒன்றை தயார் செய்தது.
இது குறித்து ஜெர்மனியின் நிதி அமைச்சர் வொல்ஃப்கேங்க் ஸ்கேயுபுள் கூறும்போது, "இந்த முறை நிச்சயம் ஜெர்மனிதான் கோப்பையை வெல்லும் என்பதில், நாங்கள் உறுதியுடன் இருந்தோம். அந்தக் கனவை ஜெர்மனி அணியினர் நனவாக்கியுள்ளனர் என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.
நாங்கள் இதற்காக முன்னரே தயார் செய்த அஞ்சல்தலை எப்போதும் ஜெர்மனி மக்களின் நினைவில் தங்கத் தகுந்தவையாக இருக்கும். ஜெர்மன் அணி நம் அனைவருக்கும் அளித்த இந்த வெற்றியின் சின்னமாக இந்தத் அஞ்சல்தலை இருக்கும்" என்றார்.
ஜெர்மனி மதிப்பில் ஓர் அஞ்சல்தலையின் விலை 60 சென்ட். இந்த அஞ்சல்தலைகள் அனைத்தும் வரும் வியாழக்கிழமை அன்று விற்பனைக்கு வருகிறது. அஞ்சல்தலைகள், முதலாவதாக பயிற்சியாளர், வீரர்கள் மற்றும் அணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த அஞ்சல்தலையை வடிவமைத்த லட்ஸ் மென்ஸே கூறும்போது, "ஜெர்மனி அணியினர் கோல் போஸ்டை நோக்கி ஓடுவது போல வடிவமைக்கப்பட்டது. எவர் ஒருவரையும் முன்னிலைப்படுத்தாமல், ஓர் அணியாக காண்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அஞ்சல்தலை தயார் செய்யப்பட்டது.
பொதுவாக இதுபோன்ற விஷயங்களுக்கு, வடிவமைக்க சுமார் ஆறு மாத காலமாவது தேவை. ஆனால், இந்த வடிவமைப்பை, உலகக் கோப்பை போட்டிகள் ஆரம்பித்த பின்னரே, ஜெர்மன் அரசு அளித்தது" என்றார்.
இந்த அஞ்சல்தலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது, ஜெர்மனி அணி இறுதிப் போட்டியில், தோல்வியடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்று கேட்டதற்கு, "ஜெர்மனி வெற்றியைடையும் என்று உறுதியாக நம்பினோம்.
ஒருவேளை, தோல்வியடைந்திருந்தால் இழப்புதான். ஜெர்மனி அணியின் வெற்றியை கணித்துத் செய்து தயார் செய்யப்பட்ட அஞ்சல்தலைகள் மதிப்பையும் இழந்திருக்கும்" என்று நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT