Published : 25 Feb 2023 08:50 PM
Last Updated : 25 Feb 2023 08:50 PM
கீவ்: தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெலன்ஸ்கி பேசும்போது, “மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு நிதி சார்ந்தும், ஆயுதங்கள் சார்ந்தும் அவை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரஷ்யாவின் படைகளை நாங்கள் பின்னுக்குத் தள்ளுவோம். எங்களது வெற்றி தவிர்க்க முடியாததாக ஆகும். நாம் சிறப்பாக பணியாற்றினால். வெற்றி நமக்கு நிச்சயம்” என்று பேசினார்.
இதனிடையே, உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் உக்ரைனால் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் 141 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
முன்னதாக, ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரின் நிலை குறித்து கூறும்போது, “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவும், ஐரோப்ப நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகின்றன. இந்தச் சூழலில் நாங்கள் போதும் இந்தப் போரை கைவிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.
பின்னணி: கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT