Published : 25 Feb 2023 03:39 PM
Last Updated : 25 Feb 2023 03:39 PM

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய நட்பை இந்தியா பயன்படுத்தும்: அமெரிக்கா நம்பிக்கை

புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா உடனான நட்பை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இது தொடர்பாக டொனால்ட் லு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிக நீண்ட கால நட்பு இருக்கிறது. பனிப்போர் காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான, மிக நீண்ட நட்பு இருந்து வருகிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புகிறோம்.

ஒரு நாட்டின் இறையாண்மை, அதன் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை தொடர்பாக ஐநா சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே கூறி இருக்கிறார்'' என டொனால்ட் லு தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறும் ஜி20 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வரும் மார்ச் 1-ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் புதுடெல்லி வர இருக்கிறார். இதை சுட்டிக்காட்டி, இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், போரை முடிவுக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தியாவிடம் அவர் கோரிக்கை வைப்பாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த டொனால்ட் லு, ''இந்தியாவும் மத்திய ஆசிய நாடுகளும் ரஷ்யாவுடன் மிக நீண்ட கால நட்பை கொண்டிருக்கின்றன. அந்த நட்பு எப்போது வேண்டுமானாலும் முடிவடையலாம் என நான் கருதவில்லை. ஆனால், ஐநா சாசனத்திற்கு உட்பட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர பங்களிப்பை நல்குமாறு நாங்கள் கோர முடியும்'' என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x