Published : 23 Jan 2023 07:27 PM
Last Updated : 23 Jan 2023 07:27 PM
பிரிடோரியா: உக்ரைன் போர் முடிவடையாமல் இருப்பதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் நலீதி பந்தரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரான பிரிடோரியாவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து செர்கி லாரோவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஓராண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அது எப்போது முடிவுக்கு வரும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த செர்கி லாரோவ், ''போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள கடந்த ஆண்டு மார்ச் மாதமே ரஷ்யா முன்வந்தது. போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை ஏற்று அதற்கான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். மோதலை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்புமே ஒப்புக்கொண்டோம்.
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இப்போதே ஒப்பந்தத்ததை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என உக்ரைனுக்கு நெருக்கடி கொடுத்தன. இது எல்லோருக்குமே தெரியும். ஒப்பந்தத்தை உக்ரைன் ஏறக்குறைய ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில்தான், உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் சேர்ந்து ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்தன. எத்தகைய உடன்பாட்டையும் ஏற்பதாக ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். நாங்கள் இதனை தொடர்ந்து நிராகரித்து வருகிறோம்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். போரை முடிவுக்குக் கொண்டு வர உண்மையான விருப்பம் இருக்குமானால், பேச்சுவார்த்தைக்குத் தயார் என புதினும் கூறி இருக்கிறார்'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT