Published : 30 Dec 2022 10:43 AM
Last Updated : 30 Dec 2022 10:43 AM
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தரை, வான், கடல் வழியாக நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. உக்ரைன் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
கடந்த நவம்பரில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது 10 அம்ச அமைதி திட்டத்தை உக்ரைன் முன்மொழிந்தது. தற்போது அதே 10 அம்ச திட்டத்தை முன்வைத்து அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது.
இதன்படி 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்தபோது இருந்த எல்லைகள் உறுதி செய்யப்பட வேண்டும். உக்ரைன் பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா தீபகற்ப பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது நடைபெறும் போரில் உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டோனஸ்க், லுகான்ஸ்க், கார்சான், ஜாபோரிசியா ஆகிய 4 பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உக்ரைனின் 20 சதவீத பகுதிகள் ரஷ்யாவிடம் உள்ளன.
அந்த பகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். மக்களின் விருப்பத்தின்பேரில் கருத்துக் கணிப்பு நடத்தி அவை ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன. அப்பகுதிகளில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்படாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்கவும் ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், லீவிவ், நிப்ரோ உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மின் விநியோக கட்டமைப்புகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. லீவிவ் நகரில் 90 சதவீத பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனின் 2-வது பெரிய நகரான கார்கிவ் உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
18,000 பேர் உயிரிழப்பு: உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 80 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் தலா ஒரு லட்சம் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சூழலில் 10 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போரை நிறுத்த உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் நேரிலும் தொலைபேசியிலும் பிரதமர் மோடி பலமுறை பேசியுள்ளார். இப்போதைய நிலையில் உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா தலைமையில் எதிரணியும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
நடுநிலைமையுடன் இரு அணிகளுடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் இந்தியாவால் மட்டுமே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அண்மையில் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றது. இதையொட்டி இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ராஜ்ஜியரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT