Published : 26 Dec 2022 02:26 PM
Last Updated : 26 Dec 2022 02:26 PM
மாஸ்கோ: உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த உக்ரைன் - ரஷ்யா போர், வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து வருகிறது. ”எங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வரை உக்ரைனிலிருந்து வெளியேற மாட்டோம்” என்று ரஷ்யாவும், “ரஷ்ய ராணுவத்தை எங்கள் பகுதியிலிருந்து அகற்றும் வரை ஓயமாட்டோம்” என்று உக்ரைனும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், போர் காரணமாக அரங்கேறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கவலை தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில் போர் தொடர்பாக உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் புதின் பேசும்போது, “ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைப் பற்றி சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தையை எதிர்ப்பது நாங்கள் அல்ல. அவர்கள்” என்றார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை திடீரென அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெலன்ஸ்கி - பைடன் சந்திப்பு குறித்து புதின் கருத்து கூறும்போது ”உக்ரைன் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ரஷ்யா மீது அமெரிக்கா மறைமுகப் போர் நடத்தி வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT