Published : 22 Dec 2022 03:36 AM
Last Updated : 22 Dec 2022 03:36 AM
வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 300 நாட்கள் ஆகிவிட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து ஜெலென்ஸ்கிக்கு வரவேற்பு கொடுத்தார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்பின் போது, ஜோ பைடன் பேசுகையில், "நம்புவது கடினம்தான். ஆனாலும், இந்த கொடூரமான போர் 300 நாட்களை கடந்துவிட்டன. ரஷ்ய அதிபர் புதின் உக்ரேனியர்களின் உரிமையின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளார். பயமுறுத்துவதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி உக்ரைன் மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதல் இது" என்று கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல் ஜெலென்ஸ்கி பேசுகையில், "அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி. மிக முக்கியமாக அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான மனிதாபிமான மற்றும் இராணுவ உதவிகளை அனுப்பி வருகிறது அமெரிக்கா. அதன் தொடர்ச்சியாக ஜெலென்ஸ்கியின் அமெரிக்க வருகை அமைந்துள்ளது. உலக அளவில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT