Published : 19 Nov 2022 09:32 AM
Last Updated : 19 Nov 2022 09:32 AM

ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா? - எலான் மஸ்க் வாக்கெடுப்பு

சான் ஃப்ரான்சிஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி ட்விட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்துகிறார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனம் கைமாறியது, அடுத்தடுத்து நடைபெறும் அதிரடிகள் என எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் எலான் மஸ்க் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு தான் என்றால் அது மிகையாகாது. ஆம் ஒரு கருத்துக் கணிப்பில் ட்விட்டரின் கருத்து சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பி ட்விட்டரை நானே வாங்குவே என்று அறிவித்து இப்போது அதன் உரிமையாளரும் ஆகிவிட்டார் எலான் மஸ்க்.

ட்விட்டர் எலான் மஸ்கின் கையில் சென்றதுமே ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவார் என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ட்விட்டரில் எலான் மஸ்க் ஒரு வாக்கெடுப்பை பகிர்ந்தார். அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ர்மபை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று வினவியிருந்தார். இந்த வாக்கெடுப்பில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் வாக்களித்துள்ள நிலையில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ஆம் சேர்க்கலாம் என்று பதில் அளித்துள்ளனர். இதனால் ட்ரம்ப் மீதான ட்விட்டர் தடை நீங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் மார்க் ஜுக்கர்பெர்கின் மெட்டா நிறுவனம் ட்ரம்ப் மீதான பேஸ்புக் தடை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமாக்களால் கவலை இல்லை.. முன்னதாக, ட்விட்டர் ஊழியர்களுக்கு மஸ்க் கெடு விதித்திருக்க அதை ஏற்க மறுத்து கொத்து கொத்தாக ராஜினாமா செய்ய. அது குறித்து மஸ்க் தனது ட்விட்டரில், சிறந்த ஊழியர்கள் எங்களுடன் இருக்கின்றனர். ராஜினாமாக்கள் பற்றி கவலையில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பும் சமூக வலைதள தடையும்.. அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரிசையில் டொனால்டு ட்ரம்ப் இணைந்தார்.

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் போது ட்ரம்ப் சமூக வலைதளங்கள் வாயிலாக வெறுப்பை விதைத்ததாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்தன. அதன் பின்னர் ட்ரம்ப் தனக்கென்று தனியாக ஒரு சோஷியல் மீடியா தளத்தையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x