Published : 18 Nov 2022 04:06 PM
Last Updated : 18 Nov 2022 04:06 PM

“ஆசிய நாடுகளே... உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான்” - பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் மக்ரோன்

பாங்காக்: “ஆசிய நாடுகளே... உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாங்காக்கில் நடந்த பசுபிக் உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பேசும்போது, “உக்ரைன் போர் குறித்து உங்களது கருத்தையும் திரட்ட முயற்சிக்கிறேன். ஆசிய நாடுகளே... உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான். அவ்வாறு பார்த்தால்தான் இதில் நிலைப்புத்தன்மை உருவாகும். உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையேயான போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ய வேண்டும். வரும் மாதங்களில் சீனாவால் இவ்விவகாரத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீள உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்து வருகிறார்கள். அதன் ஓர் அங்கமாகத்தான் மக்ரோனின் இந்தப் பேச்சும் பார்க்கப்படுகிறது.

போருக்கு காரணம்: உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் கீவ் நகர் வரை வெகு வேகமாக முன்னேறிய ரஷ்யப் படைகள் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் கொடுத்த பதிலடியால் பின்வாங்கியது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் படைகள் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, கெர்சன் நகரை உக்ரைன் மீட்டுவிட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x