Published : 18 Nov 2022 07:12 AM
Last Updated : 18 Nov 2022 07:12 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப், கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றார். 2020-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அதிபர் மாளிகை வளாகத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, ட்ரம்புக்கு தடை விதித்த பேஸ்புக், அவரது கணக்கை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்தது. இதுபோல, ஸ்னாப்சாட், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் இருந்து ட்ரம்ப் நீக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், வரும் 2024-ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால் ட்ரம்ப் மீதான தடையை பேஸ்புக் விலக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் தடையை விலக்கும் திட்டம் இல்லை என பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், 2023-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியுடன் ட்ரம்ப் மீதான தடை முடிவடைகிறது. இதுபோல ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்திய எலான் மஸ்க், ட்ரம்ப் மீது முந்தைய ட்விட்டர் நிர்வாகம் விதித்த தடை சரியல்ல என தெரிவித்தார். அதேநேரம், நிறுவனத்தில் சில நிர்வாக ரீதியிலான மாற்றம் செய்த பிறகே ட்ரம்ப் உள்ளிட்டோர் மீதான தடையை விலக்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT