Published : 17 Nov 2022 06:28 AM
Last Updated : 17 Nov 2022 06:28 AM
கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் உக்ரைன் எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் ஒரு கிராமத்தில் ஒரு ஏவுகணை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஏவுகணை ரஷ்யாவின் தயாரிப்பு என போலந்து வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தலைநகர் வார்சாவில் உள்ள ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், இந்த ஏவுகணை தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தோனேசியா வின் பாலி தீவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக தலைவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் ஜப்பான் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு ஜோ பைடன் கூறும்போது, “அந்த ஏவுகணை ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டது இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றார்.
போலந்து அதிபர் அன்ட்செஜ் துடா கூறும்போது, “அந்த ஏவுகணை ரஷ்ய தயாரிப்பாக இருக்கலாம் என கருதுகிறோம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, ரஷ்யாவின் ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை தவறுதலாக போலந்தில் விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறும்போது, “போலந்தில் விழுந்தது உக்ரைன் ஏவுகணையாக இருக்கலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT