Published : 07 Nov 2022 05:48 PM
Last Updated : 07 Nov 2022 05:48 PM
தெஹ்ரான்: ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகம் செய்ததை ஈரான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏற்றுமதி செய்தது தொடர்பாக கடுமையாக விமர்சனம் எழுந்து வந்தது. இதுவரை ஈரான் தயாரித்த 300 ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளோம் என்று உக்ரைனும் கூறியது. ஆனால், தாங்கள் ரஷ்யாவுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்யவில்லை என்று ஈரான் தொடர்ந்து கூறி வந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்ததை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஈரான் நிதியமைச்சர் ஹோசைன் அமீர் கூறும்போது, “ஆம், நாங்கள் ரஷ்யாவுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்தோம். உக்ரைனுடன் ரஷ்யா போரிடுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையில்தான் நாங்கள் ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகம் செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, ட்ரோன் விவகாரத்தில் ஈரான் பொய் சொல்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, “ஈரான் பொய் கூறுகிறது. ஈரான் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை விநியோகம் செய்திருக்கிறது. அந்த ட்ரோன்களை பயன்படுத்திதான் ரஷ்யா எங்கள் எரிபொருள் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது” என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர்.
போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யா செய்த போர்க் குற்றங்களை உக்ரைன் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT