Published : 21 Jul 2014 12:54 PM
Last Updated : 21 Jul 2014 12:54 PM
இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் காஸாவில் பலியானோர் எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது. அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அடிக்கடி மோதலும், எதிர்த் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. கடந்த 13 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
எகிப்தின் போர் நிறுத்தத் திட்ட முயற்சியை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டு, கடந்த 15 ஆம் தேதி காலை சில மணி நேரம் போர் நிறுத்தம் செய்தது. ஆனால், ஹமாஸ் அதனை ஏற்க மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.
இதன் விளைவாக, இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 501 பேர் இதுவரை உயிரிழந்தனர்.
பதற்றம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளின் உறுப்பினர்கள் உடனான அவசர பேச்சுவார்த்தைக் கூட்டம் நேற்று இரவு கத்தாரில் நடைபேற்றது. அதில், காஸாவில் தற்போது உள்ள நிலைக்கு முடிவு காண வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது.
அப்போது, கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடனான ஒப்பந்தப்படி, அங்கு போர் நிறுத்தம் உடனடியாக அமல்படித்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது பேசிய கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் கலேத் அல் அட்டியா, "இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலுக்கும் ஹமாஸ் மற்றும் ஜிகாத்தின் ஏவுகணைத் தாக்குதலுக்கு முடிவு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
கத்தார் வழியே பயணித்தபோது, காஸாவில் குழந்தைகள் உள்ளிட்ட பல அப்பாவி பொதுமக்கள், இஸ்ரேல் ராணுவ தாக்குதலால், கொல்லப்பட்டிருப்பதை பார்க்க முடிந்ததாக, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான்-கி-மூன் கவலை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, "காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருவது குறித்து நானும், உலகத் தலைவர்களும் கவலை கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது'' என்றார்.
ஆனால், காஸாவில் கடந்த இரு வாரங்களில், 18 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதனால் தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த விவகாரம் தொடர்பாக பேச எகிப்து விரைந்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் பேசும்போது, "காஸாவில் ராணுவ நடவடிக்கை விரிவுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் இருதரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் எகிப்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும்'' என்று அவர் கூறியதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT