Published : 21 Jul 2014 10:30 AM
Last Updated : 21 Jul 2014 10:30 AM

மலேசிய விமான பயணிகளின் சடலங்களை மீட்க உக்ரைன் அரசு கிளர்ச்சியாளர்கள் இடையே ஒப்பந்தம்

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமான பயணிகளின் சடலங்களை மீட்பது தொடர்பாக உக்ரைன் அரசுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 196 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த விமானத்தில் மொத்தம் 298 பேர் பயணம் செய்தனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத்துடன் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டுவரும் இடத்தில் மலேசிய ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் ஏவுகணை மூலம் கடந்த வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.

விபத்து நடந்த பகுதியில் பயணிகளின் சடலங்களைத் தேடும் பணியில் உக்ரைன் அரசு அவசர சேவைப் பிரிவைச் சேர்ந்த 380 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் நொறுங்கி விழுந்த பகுதியில் 34 சதுர கி.மீ. பரப்பளவில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த தேடும் பணிக்கு கிளர்ச்சியாளர்கள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றும், இடையூறு செய்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஒப்பந்தம்

இந்நிலையில், சடலங்களை மீட்பதில் உக்ரைன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முதல்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்திய உக்ரைன் துணைப் பிரதமர் விளாடிமிர் குரோய்ஸ்மேன், “மீட்கப்பட்ட சடலங்களை குளிர்பதன வசதியுள்ள ரயில் பெட்டிகளில் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களின் உறவினர்கள் வந்ததும் சடலங்கள் அடையாளம் காணப்படும். விமானம் நொறுங்கி விழுந்த கிராபோவோ கிராமத்தைச் சுற்றி 900-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உள்ளனர்” என்றார்.

சிலரது சடலங்களை கிளர்ச்சியாளர்கள் தங்களின் பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும், விமானத்தின் பாகங்களையும் எடுத்துச் சென்று வருவதாகவும் உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தடயங்களை அழிக்கும் முயற்சி என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. மலேசியாவிலிருந்து 130 டாக்டர்கள், ராணுவ வீரர்கள், விமான வல்லுநர்கள் குழு உக்ரைனுக்குச் சென்றுள்ளது. விபத்தில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், ஹோட்டல் ஹார்கீவில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x