Published : 13 Oct 2022 04:43 AM
Last Updated : 13 Oct 2022 04:43 AM
நியூயார்க்: உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை, இந்தியா உள்ளிட்ட 107 நாடுகள் நிராகரித்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய இடங்களில் டன்ஸ்க், கெர்சன், லுகாஷ்க், ஜபோரிஷ்ஜியா ஆகிய 4 பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவற்றை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
இது சட்ட விரோதம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், அல்பேனியா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தது. இதையடுத்து, இந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பொதுச் சபையில் நடைபெறும் வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்தது. இதன் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 107 நாடுகள் ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராகவும், பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்தன. 13 நாடுகள், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. அதேசமயம், ரஷ்யா, சீனா உள்ளிட்ட 39 நாடுகள், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.
இதையடுத்து, அல்பேனியா கொண்டுவந்த, பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்புடன் கூடிய கண்டனத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டாம் என இந்தியா உள்ளிட்ட 104 நாடுகள் வாக்களித்தன. மறுபரிசீலனைக் கோரிக்கைக்கு ஆதரவாக 16 நாடுகள் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.
இதன் பின்னர். ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபன்சியா பேசும்போது, ‘‘ஐ.நா. பொதுச் சபையில் மூர்க்கத்தனமான முறைகேட்டைக் காணமுடிகிறது. துரதிருஷ்டவசமாக இதில் பொதுச் சபைத் தலைவர் முக்கியப் பங்காற்றுகிறார். எங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்க முடியவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகளின் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாமல், அதன் உரிமை பறிக்கப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல், விலகி நிற்பதை விரும்புகிறாம்’’ என்றார்.
ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றம் இல்லை என்றாலும், கடந்த சில மாதங்களாக நடந்த வாக்கெடுப்பு நடைமுறையில் ரஷ்யாவுக்கு எதிராக 3-வது முறையாக இந்தியா வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT