Published : 06 Oct 2022 06:27 AM
Last Updated : 06 Oct 2022 06:27 AM
புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல, தாக்குதல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார்.
உக்ரைனின் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைனின் ஜபோரிஷ்ஷியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் தற்போது போர் நடைபெறுகிறது. அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல் நடத்துவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ரஷ்யா-உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. எந்தவிதமான அமைதி முயற்சிக்கும் இந்தியா தயாராக உள்ளது. அணுமின் நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டால், மக்களின் சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் திரும்ப வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நன்றி தெரிவித்தார் ஜெலன்ஸ்கி
ரஷ்யா-உக்ரைன் போர் நேரத்தில் இந்தியா தெரிவித்துள்ள ஆதரவுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். அப்போது, உக்ரைனுக்கு இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அளித்த உதவியையும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனின் ஜபோரிஷ்ஷியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் தற்போது போர் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT