Published : 23 Jun 2014 08:30 AM
Last Updated : 23 Jun 2014 08:30 AM
இராக்கில் சன்னி கிளர்ச்சிப்படை தொடர்ந்து முன்னேறி வருகிறது. மேற்கு ஈராக் பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பின் படை மேலும் விரிவு படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களாக சன்னி பிரிவினரின் கிளர்ச்சிப்படையான ஐஎஸ்ஐஎல் வேகமாக முன்னேறி வருகிறது. சிரியா - இராக் எல்லையில் உள்ள சில பகுதி களையும் கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது.
காய்ம், ராவா, அநா ஆகிய நகரங்கள் ஐஎஸ்ஐஎல் அமைப்பால் கைப்பற்றப்பட்டுள்ளன. யூப்ரடிஸ் நதிப்பகுதியைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப்படை, ஹடிதா நகரிலுள்ள முக்கிய அணையை நோக்கி முன்னேறிவருகிறது. அந்த அணை தகர்க்கப்பட்டால், பெரும் வெள்ளச்சேதம் ஏற்படுவதுடன் மின்விநியோகம் பாதிக்கப்படும்.
எனவே, அந்த அணையைப் பாதுகாக்க இராக் ராணுவம் 2,000 வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. இத்தகவலை பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காய்ம் நகர் கைப்பற்றப்பட்டுள்ளதால், போர் நடை பெற்று வரும் பல்வேறு பகுதிகளுக்கும் ஆயுதங்களை வழங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. கிளர்ச்சிப்படைக்கு அன்பர் மாகாணத்தில் போர் தீவிரமடைந்துள்ளதால், பாக்தாத்திலிருந்து ஜோர்டான் எல்லைக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலை முடங்கியுள்ளது.
சன்னி கிளர்ச்சியாளர்களின் படையைத் தடுக்க முடியாமல் இராக் ராணுவம் திணறி வருகிறது. இராக் பிரதமர் நூரி அல் மாலிகி தலைமையில் ஷியா பிரிவு அரசு இராக்கை ஆண்டு வருகிறது. குர்திஸ் மற்றும் சன்னி பிரிவு மக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளாததே இந்த உள்நாட்டுப் போருக்குக் காரணம்.
ராணுவத்திலும் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் அமெரிக்க எதிர்ப்பாளர்களாக உள்ளனர். இராக் உள்நாட்டுப் போரில் நேரடியாக அமெரிக்க ராணுவத்தை ஈடுபடுத்த பராக் ஒபாமா விரும்பவில்லை. ஆகவே 300 ராணுவ ஆலோசகர்களை அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
7 பேர் பலி
இதனிடையை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள திக்ரித் நகரில் இராக் ராணுவம் மேற் கொண்ட தாக்குதலில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT