Published : 11 Sep 2022 06:36 AM
Last Updated : 11 Sep 2022 06:36 AM
கீவ்: உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குபியான்ஸ்க் நகரை அந்த நாட்டு ராணுவம் ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது.
நேட்டாவில் இணைய முயன்றதாக குற்றம் சாட்டி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே நேற்று 199-வது நாளாக போர் நீடித்தது.
இதுவரை 14,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கூறியுள்ளன.
மேலும் இரு நாடுகளின் ராணுவத்தை சேர்ந்த சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனுக்கு 79.65 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருப்பதால் அந்த நாடும் பொருளாதாரரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போரை நிறுத்த ஐ.நா. சபையும் இந்தியா, இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் ரஷ்யாவும் உக்ரைனும் சமரசத்தை புறக்கணித்து போரை தீவிரப்படுத்தி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பாய நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு சீனா, ஈரான், வடகொரியா, சிரியா உள்ளிட்ட நாடுகள் பக்கபலமாக உள்ளன.
உக்ரைன் ராணுவம்.. இந்த சூழலில் அண்மை காலமாக போர்க்களத்தில் உக்ரைன் ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதி ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதில் கார்கிவ் மாகாணம், குபியான்ஸ்க் நகரை ரஷ்ய ராணுவத்திடம் இருந்து உக்ரைன் ராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர். சுமார் 27,000 பேர் வசிக்கும் இந்த நகரை மீட்டிருப்பதாக உக்ரைனுக்கு பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக உக்ரைன் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த சில நாட்களில் மட்டும் ரஷ்ய ராணுவத்திடம் இருந்து 1,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை மீட்டுள்ளோம். குபியான்ஸ்க் நகரமும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது" என்று தெரிவித்தார்.
ரஷ்ய படைகள் குவிப்பு: இதனிடையே உக்ரைன் ராணுவம் முன்னேறுவதை தடுக்க ரஷ்ய ராணுவம் கிழக்குப் பகுதியில் பெரும் படைகளை குவித்து வருகிறது. ரஷ்ய விமானப்படையின் போர் விமா னங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் போர்உக்கிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT