Published : 05 Jun 2014 10:00 AM
Last Updated : 05 Jun 2014 10:00 AM

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கத் தயாராகும் பாலியல் தொழிலாளிகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 12-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை காண வெளிநாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் பிரேஸிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து விளையாட்டின் மீது தங்களின் உயிரையே வைத்திருக்கும் பிரேஸில் ரசிகர்களுக்கு, உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தங்கள் நாட்டில் நடக்கிறதென்றால், கேட்கவா வேண்டும்? மகிழ்ச்சியில் திளைத்து வரும் அந்நாட்டு ரசிகர்கள், போட்டி தொடங்கும் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டில் உள்ள 10 லட்சம் பாலியல் தொழிலாளிகளும் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

பெலோ ஹாரிஸான்டே நகரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பாலியல் தொழிலாளி ஒருவர் கூறும்போது, “நான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில், இத்தொழிலுக்கு வந்தேன். பொதுவாக கேளிக்கை விடுதிகளுக்கு இரவில் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மூலமே போதிய பணம் சம்பாதித்துவிடுவோம்.

இந்த முறை கால்பந்து போட்டியை காண கூடுதலாக வெளிநாட்டுப் பயணிகள் வருவார்கள் என்பதால், அடுத்த ஒரு மாத காலத்தில் ஏராளமான பணம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார். இவரைப் போன்று வறுமையின் காரணமாக இத்தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, ஆடம்பரமான வாழ்க்கைக்காக தவறான பாதையில் சென்ற பெண்களையும் பெலோ ஹாரிஸான்டே நகரில் நாம் பார்க்கலாம்.

இவர்கள் அனைவரும் தங்களின் பணத்தேவைக்காக இப்போது எதிர்நோக்கியிருப்பது உலகக் கோப்பை கால்பந்து போட்டியைத்தான். இந்நகரில் உள்ள 23 பாலியல் தொழில் கூடங்களில் வசிக்கும் 2,000 பாலியல் தொழி லாளிகள், மும்முரமாக ஆங்கில மொழியை பயின்று வருகின்றனர். இவர்களுக்கென்று அதே பகுதியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதெல் லாம் எதற்காக என்கிறீர்களா? மினெயிரோ மைதானத்தில் நடை பெறவுள்ள போட்டிகளை காண வரும் ஆங்கில மொழி பேசும் ரசிகர்களுடன் (வாடிக்கையாளர் கள்) நன்கு பழகி பணம் சம்பாதிப்பதற்குத்தான்.

இப்படி வெளிப்படையாக மொழிப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வரும் இவர்கள் மீது அரசு ஒன்றும் நடவடிக்கை எடுக்காதா என்று நீங்கள் கேட்கலாம். பிரேஸிலில் 2000-ம் ஆண்டிலிருந்து பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதால், இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருந்து வருகிறது. பலர் தங்களுக் குள் இணைந்து சங்கம்வைத்துச் செயல்படுகின்றனர்.

பாலியல் தொழில் கூடங்களைத் தவிர, மசாஜ் நிலையங்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு அனுமதி தரும் ஓட்டல்கள் உள்ளிட்டவையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தொழிலில் ஈடுபடும் வியேரா என்பவர், பிற வணிக நிறுவனங்களுக்கு இணையாக, “எங்களிடம் வரும் கால்பந்து ரசிகர்கள், கிரெடிட் கார்டுகள் மூலமும் கட்டணத்தைத் தரலாம்” என்று அறிவித்துள்ளார்.

என்னதான் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டா லும், அதை ரத்து செய்யக்கோரும் குரல்களும் ஒலிக்காமல் இல்லை. அங்குள்ள தொழிற்சங்கங் களின் பெண் உறுப்பினர்கள் பலர், இத்தொழிலுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தரகர்கள், பாலியல் தொழில் விடுதிகளின் உரிமையா ளர்களால், இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். அவர்களை மீட்க அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவிக் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x