Published : 17 Jun 2014 10:00 AM
Last Updated : 17 Jun 2014 10:00 AM
கென்யாவில் பொதுமக்கள் மற்றும் காவல்நிலையத்தின் மீது சோமாலிய தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 48 பேர் உயிரிழந்தனர்.
கென்யாவின் கடலோர சிறு நகரமான பெகெடோனியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சோமாலிய தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். வீதிகளிலும் துப்பாக்கியால் சுட்டனர். காவல்நிலையத்தைத் தாக்கிய அவர்கள், இரு உணவு விடுதிகளைத் தீக்கிரையாக்கினர். இத்தாக்குதல்களில் பொதுமக்கள் 48 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலை சோமாலியா அல்கொய்தாவுடன் தொடர் புடைய அல் ஷகாப் இயக்கத்தினர் செய்தனர் என கென்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கென்ய உயர் போலீஸ் அதிகாரி டேவிட் கிமையோ, தீவிரதிகளின் தாக்குதலில் 48 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். மற்றொரு அதிகாரி கூறுகை யில், “பிரீஸ் வியூ உணவு விடுதியில் தொலைக்காட்சியில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களில் ஆண் களை மட்டும் தனியே பிரித்த தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக் கொன்றனர்.
அவ்வாறு சுட்டுக் கொல்வதைப் பார்க்கும்படி பெண்களிடம் கூறியுள்ளனர். கென்ய ராணுவத்தினர் சோமா லியாவுக்குள் சோமாலிய ஆண்களை இதுபோன்றுதான் சுட்டுக் கொல்வதாகவும் அப்பெண்களி டம் சோமாலியத் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவம் கண்காணிப்பு
இரு சிறு வேன்களில் நகருக்குள் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதாக கென்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவ கண்காணிப்பு விமானங்கள் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.சோமாலியாவில் கென்ய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அல் ஷகாப் இயக்கம் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT