Published : 16 May 2022 06:29 AM
Last Updated : 16 May 2022 06:29 AM
நியூயார்க்: நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ளது பப்பல்லோ நகரம். இங்கு ‘டாப்ஸ் பிரண்ட்லி மார்க்கெட்’ என்ற சூப்பர்மார்க்கெட் உள்ளது. இங்கு கடந்தசனிக்கிழமை 18 வயது இளைஞன், தலைக் கவசம் மற்றும் கவச உடை அணிந்து உள்ளே வந்தார். திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பப்பல்லோ நகரில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தத் தாக்குதல் நிறவெறியால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பப்பல்லோ போலீஸ் கமிஷனர் ஜோசப் கிரமக்லியா செய்தியாளர்களிடம் கூறியதாவது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் களில் பெரும்பாலானோர் கறுப்பினத்தவர்கள். இது திட்டமிட்ட நடத்தப்பட்ட நிறவெறி தீவிரவாத தாக்குதல். சம்பவ இடத்துக்குப் போலீஸ் படையினர் சென்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியஇளைஞன், எதுவும் செய்யாமல் சரணடைந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
‘டாப்ஸ்’ மார்க்கெட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அந்த இளைஞன் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அங்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர், சூப்பர் மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
ஆனால், அவர் கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பிதொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் அந்த பாதுகாவலரும் உயிரிழந்துள்ளார். மேலும், துப்பாக்கிச் சூட்டை நேரடியாக இணையத் தில் ஒளிபரப்ப கேமராக்களையும் பொருத்தி வந்துள்ளார்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் ஜோசப் கிரமக்லியா கூறினார். இந்த தாக்குதலால் கறுப்பினத் தவர்கள் கோபம் அடைந்துள்ளனர். அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க பப்பல்லோ நகரில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பத்திரிகை பிரிவு செயலாளர் கரீன் ஜீன்பையரீ கூறும்போது, ‘‘பப்பல்லோ பகுதியில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் ஜோபைடனுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவத்துக்கு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT