Published : 10 Jun 2014 06:11 PM
Last Updated : 10 Jun 2014 06:11 PM

இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: இலங்கையில் ஜெயலலிதா உருவபொம்மை எரிப்பு

கொழும்புவில் இன்று இந்திய தூதரகம் முன்பு ஆர்பாட்டம் செய்த இலங்கை தேசியவாதிகள் சிலர் தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்தனர்.

அரசமைப்புச் சட்ட 13-வது திருத்தத்தை இலங்கை அமல்படுத்த, அந்நாட்டுக்கு இந்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அகியோரது படங்களை கைகளில் ஏந்தி எதிர்கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் இந்தியத் தூதரகம் எதிரே கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் வசந்த பந்தாரா கூறுகையில், “இலங்கைக்கு எதிராகச் செயல்பட இந்திய அரசின் மீது தேவையற்ற செல்வாக்கைச் செலுத்தி வரும் ஜெயலலிதாவைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.

பெங்கமுவே நாலகா என்ற புத்த பிட்சு, ஜெயலலிதா இலங்கைக்கு எதிராகச் சிந்திக்கும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவினால் இதைச் செய்கிறார் என்று சாடினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து சமூகத்தினரும் அமைதியாக, சமாதானமாக இங்கு வாழ்ந்து வருகின்றனர், 30ஆண்டுகால போருக்குப் பிறகு கஷ்டப்பட்டு எட்டிய அமைதி 13ஆம் திருத்தம் அமல் செய்யப்பட்டால் குலைந்து போகும்” என்றார்.

போலீஸ் மற்றும் நிலக் கட்டுப்பாட்டு அதிகாரங்களை தமிழர்கள் ஆட்சிப்பகுதியான வடக்கு மாகாணத்திற்கு வழங்கினால் தனித் தமிழ் ஈழம் உருவாகவே வழிவகுக்கும் என்று இலங்கை அரசும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x