Published : 16 Jun 2014 12:24 PM
Last Updated : 16 Jun 2014 12:24 PM
வலுவான, வளமான இந்தியாவால் தான் அண்டை நாடுகளுக்கு உதவ முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பூடானுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் ஸரிங் டோப்கே, மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியேல் வாங்சக் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவர் திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
வலுவான பூடான் உருவானால் அது இந்தியாவுக்கு நல்லது. இதேபோல் வலுவான, வளமான இந்தியாவால்தான் பூடான் போன்ற அண்டை நாடுகளுக்கு உதவ முடியும். ஒட்டுமொத்த சார்க் நாடுகளும் பலன் அடையும்.
ஒருவேளை இந்தியா பலவீனமாக இருந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்தால் அண்டை நாடுகளுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும்? இந்தியா வலிமையாக இருந்தால்தான் சிறிய நாடுகளுக்கு நன்மை செய்ய முடியும்.
தீவிரவாதம் பிரிவினையை ஏற்படுத்துகிறது. சுற்றுலா மக்களை ஒன்றுபடுத்துகிறது. பூடானில் சுற்றுலா தொழிலுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவும் பூடானும் பாலும் தண்ணீரும் போன்றவை என்று முன்னாள் மன்னர் தெரிவித்துள்ளார். அந்தக் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.
பூடானுக்கு இந்தியா அளித்துள்ள அனைத்து வாக்குறுதி களும் நிறைவேற்றப்படும். இரு நாடுகளுக்கும் இடையே விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இரு நாடுகளும் இணைந்து கூட்டாக ஆய்வு மேற்கொள்வதற்காக இங்கு இமாலயா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். 20 மாவட்டங் களில் மின்னணு நூலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு மோடி தெரிவித்தார்.
மோடிக்கு நாளிதழ்கள் புகழாரம்
இந்தியாவின் உதவியுடன் பூடான் தலைநகர் திம்புவின் ஹெஜோ பகுதியில் கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட கோலாங்சூ நீர் மின் நிலையத்துக்கு அவர் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்த நீர் மின் நிலையத்தை இந்தியா அமைத்துக் கொடுக்கிறது.
இதுகுறித்து அந்த நாட்டு நாளிதழ்கள் எழுதியுள்ள தலையங்கத்தில், குஜராத் மாநிலத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிய பிரதமர் மோடி, மின்சார பற்றாக்குறையால் தவிக்கும் பூடானையும் மின் மிகை நாடாக மாற்றுவார் என்று புகழாரம் சூட்டியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT