Published : 13 Mar 2022 04:15 AM
Last Updated : 13 Mar 2022 04:15 AM

மசூதி, குடியிருப்பு பகுதிகள் மீது குண்டுவீச்சு: ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானப்படை தளம் தகர்ப்பு

கீவ்

ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் வாசில்கிவ் நகரில் அமைந்துள்ள விமானப்படைத் தளம் தகர்க்கப்பட்டது. மரியுபோல் நகரில் மசூதி, குடியிருப்பு பகுதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

உக்ரைன் அதிபர் ஜெலன்கி நேற்று வெளியிட்ட வீடியோவில், "கீவ் நகரை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இந்த நேரத்தில் ரஷ்ய தாய்மார்களிடம் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறேன். உங்கள் மகன்களை போருக்கு அனுப்ப வேண்டாம். அவர்கள் கொல்லப்படலாம் அல்லது சிறைபிடிக்கப்படலாம். உங்கள் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து உடனடியாக செயல்படுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய ராணுவத்திடம் கீவ் நகர மக்கள் சரணடைய மாட்டார்கள், ஒவ்வொருவரும் ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவார்கள் என்று உக்ரைன் அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவம் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் வாசில்கிவ் நகரில் அமைந்துள்ள விமா னப்படைத் தளம் தகர்க்கப்பட்டது. மரியுபோல் நகரில் மசூதி, குடியிருப்பு பகுதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அந்நகரின் கிழக்குப் பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

கார்கிவ் நகரம் மீது ரஷ்ய ராணுவம்நடத்திய தாக்குதலில் ஒரு மனநல மருத்துவமனை, 50 பள்ளிகள் சேதமடைந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மெலிட்டோபோல் நகரின் மேயரை ரஷ்ய உளவாளிகள் கடத்தி சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை விடுவிக்க கோரி அந்த நகர மக்கள் நேற்று சாலை, தெருக்களில் திரண்டனர்.

ரஷ்ய துணைப் பிரதமர்செர்கே ரியாபோவ் நேற்று கூறும்போது, "அமெரிக்காவின் தூண்டுதலால் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

அவற்றை எளிதாக எதிர்கொள்வோம். உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. அந்த ஆயுதங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம்" என்று எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது போரை கைவிட்டு உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x