Published : 21 Oct 2021 08:39 AM
Last Updated : 21 Oct 2021 08:39 AM
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக சமூக வலைதளம் தொடங்கியுள்ளார். ட்ரூத் சோஷியல் "TRUTH Social" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வலைதளத்தின் பீட்டா லான்ச் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
ட்ர்ம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனம் சார்பில் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளம் வெளியாகிறது.
இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில், "நான் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தைத் தொடங்கியுள்ளேன். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அடாவடித்தனத்துக்கு சவால்விடும் வகையில் இதனைத் தொடங்கியுள்ளேன். சமூக வலைதளங்களில் தலிபான்கள் அதிகளவில் இருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபருக்கு இடமில்லை. நான் ப்ளாக் செய்யப்பட்டேன். இது ஏற்புடையதல்ல" என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். சில வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. இதனால், ட்ரம்ப்பை பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் தடை விதித்தன.
இதனைத் தொடர்ந்து மே மாதம் ட்ரம்ப் ஒரு ப்ளாக் (வலைப்பூ) தொடங்கினார். அதற்கு "From the Desk of Donald J. Trump" எனப் பெயரிட்டார்.
இதற்கிடையில் இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப்சேட் போன்ற சமூகவலைதளங்களில் தடை செய்யப்பட்ட ட்ரம்ப் தனது வலைப்பூவை ஆரம்பித்த ஒரே மாதத்தில் மூடினார்.
இந்நிலையில் தற்போது, ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தைத் தொடங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT