Published : 16 Jun 2014 10:00 AM
Last Updated : 16 Jun 2014 10:00 AM
பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், கராச்சி விமான நிலைய தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் உள்ளிட்ட 80 தீவிரவாதிகள் பலியாயினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நடந்த கராச்சி விமான நிலைய தாக்குதலில் தொடர்புடையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகள் மலைப் பிரதேசமான வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருப்ப தாக உறுதியான தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வடக்கு வசிரிஸ்தானின் டெகன் மற்றும் தட்டா கெல் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை வான் வழி தாக்குதல் நடத்தியதில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாயினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும் அப்பகுதியிலிருந்த ஆயுதக்குவியலும் அழிக்கப்பட்டன. குறிப்பாக, கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகப்படும் நபரும் இந்தத் தாக்குதலில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு வாரத்துக்கு முன்பு ஜின்னா விமான நிலையத்தின் மீது உஸ்பெகிஸ்தானின் 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 10 தீவிரவாதிகள் உட்பட 37 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT