Published : 07 Jun 2014 10:00 AM
Last Updated : 07 Jun 2014 10:00 AM
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அங்கத்தினர்கள் 40 பேருக்கு சிங்கப்பூர் கட்டுமான நிறுவனம் ஒன்று வேலை வழங்க இருக்கிறது. இந்த தகவலை மறுவாழ்வுத் துறை தலைமை ஆணையர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 12000 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் மறுவாழ்வு பயிற்சி மையம் அமைத்தது.
இந்த திட்டத்தின் காரணமாக, ஏறத்தாழ 11000க்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் சேர்ந்துள்ளனர். இன்னும் 132 முன்னாள் புலி உறுப்பினர்களே பயிற்சி பெற்று வருகின்றனர். மறுவாழ்வு மையங்களில் பயிற்சி பெற்று சமூகத்தில் மீண்டும் கலந்து இயல்பு வாழ்க்கை நடத்துபவர்களில் 230 பேர் மேல் படிப்பும் 35 பேர் பல்கலைக்கழகங்களிலும் கல்வியைத் தொடர்கின்றனர்.
விடுதலைப் புலிகளினால் உளவியல் மாற்றத்திற்கு உள்ளான இவர்களை நல்லொழுக்கமுள்ள குடிகளாக மாற்ற பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இந்த மறுவாழ்வு பயிற்சி நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கல்வி, தொழிற்பயிற்சி, விளையாட்டு, தியானப் பயிற்சி, சமய அனுஷ்டானங்கள், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட பல செயற்பாடுகள் இவர்களது நலன் கருதி மேற்கொள்ளப்பட்டன.இவ்வாறு விஜேதிலக கூறினார்.
மறுவாழ்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து வெற்றிகரமாக முடித்துவிட்டு வரும் முன்னாள் புலிகளுக்கு தொழில்தொடங்க குறைந்த வட்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கடன் தரப்படுகிறது.
இதுவரை முன்னாள் விடுதலைப்புலிகள் 1773 பேர் கடன் பெற்றுள்ளனர். கற்றபாடம் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைப்படி, கைதான விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் விவகாரத்தை ஆராயவும் தேவைப்பட்டால் இவர்களுக்கு சட்ட உதவி ஏற்பாட்டை துரிதப்படுத்தவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT