Published : 07 Jan 2021 01:48 PM
Last Updated : 07 Jan 2021 01:48 PM
அமெரிக்க நாடாளுமன்றத்தை ட்ரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதையும், போராட்டம் நடத்தியதையும் கண்டித்துள்ள துணை அதிபர் மைக் பென்ஸ், “வன்முறை ஒருபோதும் வெல்லாது, சுதந்திரம்தான் வெல்லும்” எனத் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மூலம் தாக்கியதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கலவரத்தால் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் அதுபாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்தக் கலவரம் குறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், “அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி வந்து கலவரத்தில் ஈடுபட்டுவர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இந்தப் புனிதமான இடத்தில் ஏற்பட்ட உயிரிழப்பையும், இந்தக் கட்டிடத்தைக் காக்க முற்பட்டதில் காயம் அடைந்தவர்களுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பாதுகாக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
நம்முடைய நாடாமன்றத்துக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்கள் வெற்றி பெறவில்லை. வன்முறை ஒருபோதும் வெற்றி பெறாது. சுதந்திரம்தான் வெல்லும். இன்னும் இந்த நாடாளுமன்றம் மக்கள் மன்றமாகவே இருக்கிறது.
இதுவரை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தை நோக்கி வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இந்த நாடாளுமன்றத்தை நாங்கள் மீண்டும் கூட்டுவோம். ஜனநாயகத்தின் வலிமையையும், எதிர்க்கும் தன்மையையும் உலகம் மீண்டும் பார்க்கட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீண்டும் கூடுவார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தை நோக்கி ட்ரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை துணை அதிபர் பென்ஸ் நடத்தி வந்த நிலையில், நவம்பர் 3-ம் தேதி நடந்த தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்கக் கோரி அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால், அதற்கு துணை அதிபர் மைக் பென்ஸ் மறுத்துவிட்டார்.
இதையடுத்து, துணை அதிபர் மைக் பென்ஸை அதிபர் ட்ரம்ப் கடுமையாகச் சாடினார். அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “துணை அதிபர் மைக் பென்ஸுக்குத் துணிச்சல் போதவில்லை. நமது நாட்டையும், நமது அரசியலமைப்பையும் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய பென்ஸுக்குத் துணிச்சல் இல்லை. திருத்தப்பட்ட உண்மைகளுக்குச் சான்றளிக்க இந்தக் கூட்டம் வாய்ப்பளிக்கிறது. அமெரிக்கா உண்மையைக் கோருகிறது” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன், வெற்றி பெற்றுள்ளதை அதிபர் ட்ரம்ப் ஏற்காமல் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாகப் பேசி வருகிறார். இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் குடியரசுக் கட்சி சார்பில் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT