Published : 25 Nov 2020 09:08 PM
Last Updated : 25 Nov 2020 09:08 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனின் வெற்றி சீனாவின் வெற்றி என்பதுபோல் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கூறி, மக்களை பயமுறுத்தி வந்தார். ஆனால், அவரது பிரச்சாரங்கள் எடுபடாமல் போனது. அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து மோசடி, திருட்டு என்று ட்ரம்ப் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.
ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சீனா, ரஷ்யா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததுடன், எந்தக் கருத்தும் கூறவில்லை.
ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்க-சீன உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும், ட்ரம்ப்பின் தோல்விக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில்கூட சீனா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக ஜோ பைடன் அறிவித்துக் கொண்டதைக் கவனித்தோம். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள், அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இறுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, ''அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். சீனா-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது இரு நாடுகளிலும் உள்ள மக்களின் அடிப்படை நலன்களுக்கு உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT