Published : 19 Nov 2020 01:47 PM
Last Updated : 19 Nov 2020 01:47 PM
எங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை தொடர்பான கொள்கை தோல்வி அடைந்துவிட்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ''ஈரான் மீதான பொருளாதாரத் தடை தொடர்பான கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்து வரும் வாரங்களில் ஈரான் மீது பொருளாதாரத் தடை தொடரும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு ஈரான் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் விரக்தியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்கள் மீதான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்த கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.
மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொன்றார். இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.
முன்னதாக, சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT