Last Updated : 15 Nov, 2020 10:39 AM

2  

Published : 15 Nov 2020 10:39 AM
Last Updated : 15 Nov 2020 10:39 AM

மார்க்சிஸ்ட் ஆட்சியில் வாழ முடியாது: அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் போராட்டம் 

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே போராட்டம் நடத்திய அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் : படம் ஏஎன்ஐ

வாஷிங்டன்


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவி்த்து வாஷிங்டன் நகரில் ஆயிரக்கணக்கான குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக திரண்டு நேற்றுப் போராட்டம் நடத்தினர்.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு ட்ரம்ப் அதிபராகத் தொடர வேண்டும். மார்ச்க்சிஸ்ட் சிந்தனையின் கீழ் வாழ முடியாது என்று கோஷமிட்டு அதிபர் ட்ரம்ப்பின் ஆதாரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அமெரிக்காவில் கடந்த 3-ம்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் 270 பிரதிநிதிகள் வாக்குகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

துணை அதிபராக போட்டியிட்ட கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றார். ஆனால், 2-வது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 230க்கும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன எனக் கூறி பல்வேறு மாநிலங்களில் குடியரசுக் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ள என அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே ப்ரீடம் ப்ளாஸா பகுதியில் நேற்று காலை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது, அதிபர் ட்ரம்ப்புக்கு அடுத்த 4 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கிட வேண்டும். அமெரிக்காவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாங்கள் வாழ முடியாது என்று கோஷமிட்டனர்.

அமெரிக்க கொடிகளை உயர்த்திப் பிடித்தும், அதிபராக மீண்டும் ட்ரம்ப் வர வேண்டும் என்ற வாசகங்களை ஏந்திய பதாகைகளைத் தூக்கிப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

இதேபோல ப்ளோரிடாவில் உள்ள டெல்ரே பீச் பகுதியிலும் நேற்று ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். மீண்டும் ட்ரம்ப் அதிபராக வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மிச்சிகன் நகரில் உள்ள லான்சிங் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ட்ரம்ப்புக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். ஜோ பைடன் 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தி்்ல் வென்றதில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x