Published : 04 Nov 2020 07:11 PM
Last Updated : 04 Nov 2020 07:11 PM
வாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்த ட்ரம்ப் முயன்றால் அதனைச் சட்டரீதியாக அணுகுவோம் என்று ஜோ பைடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பைடன் அதிபர் தேர்தலில் மோசடி செய்திருக்கிறார். சட்டத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, நாங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வோம்'' என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் ட்ரம்ப்புக்கு ஜோ பைடன் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜோ பைடனின் தேர்தல் பிரச்சார மேலாளர் ஜென் கூறும்போது, “வாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்த ட்ரம்ப் முயன்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இதனை எதிர்கொள்ளச் சட்டரீதியான குழு எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க், மேரிலேண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட், நியூஜெர்ஸி ஆகிய மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
முக்கிய மாகாணங்களான ஒஹையோ, புளோரிடாவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பல மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும், ட்ரம்ப் தொடர்ந்து கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தபால் வாக்குகளை எண்ணும் பட்சத்தில் முடிவும் ஜோ பைடனுக்கே சாதகமாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT