Published : 03 Nov 2020 08:45 PM
Last Updated : 03 Nov 2020 08:45 PM
உலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கியது. அமெரிக்க மக்கள் வாக்குப்பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கைச் செலுத்தக் காத்திருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை நூற்றாண்டுகால பழமையான குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸால் இதுவரை 2.30 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். 91 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாக்களிக்க மக்கள் அஞ்சி 10 கோடி மக்கள் ஏற்கெனவே மின்னஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளைச் செலுத்திவிட்டனர்.
மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்
அமெரிக்கத் தேர்தல் முறை சற்று வித்தியாசமானது. மக்கள் நேரடியாக அதிபர் ட்ரம்ப்பையோ அல்லது ஜோ பிடனையோ தேர்ந்தெடுக்க முடியாது. ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப எலக்ட்ரோல் காலேஜ் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் தேர்வுக் குழுவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் 538 வாக்காளர் குழு இருக்கிறார்கள். இதில் 270 வாக்காளர் குழுவின் வாக்குகளைப் பெறுபவர்கள் அதிபர் தேர்தலில் வெல்ல முடியும்.
உடனே முடிவு தெரியாது
இந்திய நேரப்படி நாளை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படாது. முடிவுகளைத் தெரிந்துகொள்ள பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். ஆதலால், வாக்குப்பதிவு முடிந்தவுடன் சில மணி நேரங்களில் முடிவுகள் வெளிவராது.
இந்தியர்களுக்கு முக்கியப் பங்கு
அமெரிக்காவில் தற்போது 40 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதில் 25 லட்சம் மக்கள், தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 13 லட்சம் இந்தியர்கள் முக்கியமான மாநிலங்களான வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களான டெக்சாஸ், மிச்சிகன், ப்ளோரிடா, பென்சில்வேனியா ஆகியவற்றில் வசிக்கின்றனர்.
9 நேர மண்டலங்கள்
பென்சில்வேனியா, விஸ்கான்சின் மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நூற்றுக்கணக்கில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 9 விதமான நேர மண்டலங்கள் இருக்கின்றன. இந்தியாவைப் போல் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் ஒரேமாதிரியான நேரம் இருக்காது.
ஆதலால், வாக்குப்பதிவு ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு விதமான மணியில் தொடங்கும். பெரும்பாலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அதாவது நியூ ஹெமிஸ்பயர் மாகாணத்தில் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்கிவிட்டது. நியூயார்க், நியூ ஜெர்ஸி, மைன், கலிபோர்னியா கென்டகி, இந்தியானா இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.
தேர்தல் முடிவு
இதில் நியூ ஹெமிஸ்பயர் மாகாணத்தில் உள்ள டிக்ஸ்வைல் நாட்ச் நகரம்தான் முதன்முதலில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் நகரமாகும். கனடாவின் எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் மொத்தம் 5 வாக்குகள் பதிவானதில் அனைத்துமே பிடனுக்குச் சென்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “வாக்களியுங்கள், வாக்களியுங்கள். வாக்கு என்பது உங்கள் சுதந்திரம், வாழ்வாதாரம், எதிர்காலம்” எனத் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ட்விட்டரில், “இன்று தேர்தல் நாள். வாக்களியுங்கள் அமெரிக்க மக்களே! கடந்த 2008, 2012-ல் என் மீது நம்பிக்கை வைத்து இந்த நாட்டை ஒபாமாவுடன் இணைந்து வழிநடத்த உதவினீர்கள். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கும் கமலா ஹாரிஸுக்கும் வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக் கணிப்பு
தேர்தல் வல்லுநர்கள் தரப்பில் கூறுகையில், ஆன்லைன் வாக்குப்பதிவு ஒருபுறம் இருந்தாலும், மக்கள் நேரடியாகச் சென்று வாக்களிப்பது தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேர்தல் கருத்துக் கணிப்புகளின் படி, அதிபர் ட்ரம்ப்பை விட 8 சதவீதப் புள்ளிகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருவதாகத் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 270 எலெக்டோரல் காலேஜில், 270 எல்க்ட்ரோல் காலேஜை வென்றால்தான் அதிபராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் கரோனா வைரஸ் பாதிப்பால் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தது, 91 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் வேலையின்மை, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகள் தேர்தல் முடிவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT