Published : 05 Oct 2020 09:10 AM
Last Updated : 05 Oct 2020 09:10 AM
உண்மையான பள்ளிக்கூடம் என்பது மருத்துவமனைதான். அங்குதான் உண்மையான பல பாடங்களைப் படித்தேன். கரோனா வைரஸ் பற்றி நிறையக் கற்றுக்கொண்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை வால்டர்ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்துக்கு சிகிச்சைக்காக அதிபர் ட்ரம்ப் சென்றார்.
முன்னதாக, வெள்ளை மாளிகையில் தனிமையில் அதிபர் ட்ரம்ப் இருந்தபோது, அவருக்கு லேசான காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்துள்ளது. அங்கு ஆக்ஸிஜன் சிகிச்சை எடுத்துக்கொண்ட அதிபர் ட்ரம்ப் முன்னெச்சரிக்கையாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
கடந்த இரு நாட்களாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டே அங்கு இருந்தவாறே அலுவலகப் பணிகளை அதிபர் ட்ரம்ப் கவனித்தார். இன்னும் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த நேரத்தில் அதிபர் ட்ரம்ப் கரோனாவில் பாதி்க்கப்பட்டது அவரின் பிரச்சாரப் பயணங்களை வெகுவாகப் பாதித்தது.
இந்தச் சூழலில் இரு நாட்கள் மட்டுமே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அதிபர் ட்ரம்ப் நேற்று மருத்துவமனையிலிருந்து திடீரென வெளியே காரில் வந்தார்.
ராணுவ மருத்துவமனையிலிருந்து திடீரென வெளியே வந்த அதிபர் ட்ரம்ப்புக்கு அவரின் ஆதரவாளர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். காருக்குள் முகக்கவசத்துடன் அமர்ந்திருந்த அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தவாறு நன்றி செலுத்தி அங்கிருந்து புறப்பட்டார்.
மருத்துவமனையிலிருந்து புறப்படும்முன் அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட வீடியோவில், “என் நாட்டு தேசப்பற்று மிக்க மக்களுக்கும், நீண்டநேரமாக சாலையில் நின்று இருக்கும் மக்களுக்கும் நான் சிறிய வியப்பு அளிக்கப்போகிறேன்.
சாலையில் நிற்கும் மக்கள் அனைவரும் நாட்டை நேசிப்பவர்கள். உங்களுக்கு வியப்பு அளி்க்கும் வகையில் சந்திக்கப் போகிறேன்” எனத் தெரிவி்த்திருந்தார்.
மருத்துவமனையிலிருந்து அதிபர் ட்ரம்ப் வெளியே வந்தபின் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், எனக்கு இது வித்தியாசமான, ஆர்வமான பயணமாக அமைந்திருந்தது. மருத்துவமனை எனும் உண்மையான பள்ளிக்கூடத்துக்கு வந்து கரோனா வைரஸ் பற்றி அதிகமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.
புத்தகங்களைப் படிக்கும் பள்ளி அல்ல. நான் கரோனா பற்றி அதிகம் கற்றுக்கொண்டேன் புரிந்துகொண்டேன். என்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவர்களின் பணி அளப்பரியது” எனத் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப்புக்கு இன்னும் சிகிச்சை முடியாத நிலையில் திடீரென அவர் வெளியே வந்தது கேள்விகளை எழுப்பியுள்ளது. திங்கள்கிழமைதான்(இன்று) அதிபர் ட்ரம்ப் சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பப்படலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT