Published : 10 Sep 2020 07:51 PM
Last Updated : 10 Sep 2020 07:51 PM
வடகொரிய அதிபர் கிம்மின் உடல்நிலை குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், அவர் நலமுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், தற்போதைய நிலவரப்படி வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் (தேசியம் மற்றும் சர்வதேசம் உட்பட) அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியானது. இத்தகவலை தென் கொரியா வெளியிட்டது.
எனினும் கிம்மின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவலை வடகொரியா மறுத்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கிம் குறித்துப் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிம் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Kim Jong Un is in good health. Never underestimate him!
— Donald J. Trump (@realDonaldTrump) September 10, 2020
முன்னதாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம் ஆண்டு அதிபராக வந்தபின், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார்.
இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கிம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT