Published : 13 Aug 2020 11:32 AM
Last Updated : 13 Aug 2020 11:32 AM
என் தாய் ஷியாமலா கோபாலன்தான் எனக்கு முன்மாதிரி. பிரச்சினை வரும்போது சும்மா அமர்ந்திருக்கக்கூடாது, புகார் செய்ய வேண்டும், களத்தில் இறங்கிப் போராட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபராகப் போட்டியிடும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸைத் தேர்வு செய்து அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் நேற்று அறிவித்தார்.
கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாய் ஷியாமலா கோபாலன் இந்தியாவைச் சேர்ந்தவர். தமிழகத்தின் தலைநகர் சென்னையைச் சேர்ந்த ஷியாமலா ஹாரிஸ் கடந்த 1960களில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் பிரிவில் மருத்துவப் பட்டம் பெற்று மார்கப் புற்றுநோய் நிபுணராகப் பணியாற்றினார். கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முதலாக கறுப்பினத்தையும், இந்தியப் பூர்வீகத்தையும் பின்புலமாகக் கொண்ட பெண் ஒருவர் துணை அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டு போட்டியிடுவது இதுதான் முதல் முறையாகும். இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையேயும், கறுப்பினத்து மக்களிடையேயும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டபின் முதன் முதலாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் சேர்ந்து வில்விம்டனில் உள்ள டெலாவேர் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் நிதி சேர்ப்புக் கூட்டத்தில் பேசினார். கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ரூ.195 கோடி நிதி சேர்ந்துள்ளது.
டெலாவேர் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:
''என்னுடைய தாய் ஷியாமலா கோபாலன்தான் எனக்கு முன்மாதிரி. என்னையும், என் சகோதரி மாயாவையும் நம்பிக்கையூட்டி வளர்த்தவர் என் தாய் ஷியாமலாதான். அதனால்தான் அமெரிக்காவில் நாங்கள் சிறப்பான உயரத்தை எட்ட முடிந்தது. தொடர்ந்து நடைபோட்டு வருகிறோம்.
என் தாய் எப்போதும் என்னிடம் சொல்வது என்னவென்றால், பிரச்சினை வரும்போது சும்மா அமர்ந்திருக்காதே, முடிந்தவரை புகார் செய், ஏதாவது செய், களத்தில் இறங்கிப் போராடு என்று சொல்வார்.
உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய தந்தையும், தாயும், உலகின் இரு எதிர் துருவங்களில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள். என்னுடைய தாய் ஷியாமலா இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். இருவரும் உலகத்தரமான கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார்கள்.
கடந்த 1960களில் நடந்த மக்கள் உரிமை இயக்கம்தான் என் தந்தையையும் தாயையும் ஒருங்கிணைத்தது. ஓக்லாந்து நகரின் தெருக்களில் இருவரும் மாணவர்களாக இருக்கும்போது போராடும்போது சந்தித்தார்கள். இருவரும் சேர்ந்தே போராடினார்கள், நீதிக்காக முழுக்கமிட்டனர். அந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
நானும் அந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக இருக்கிறேன். நான் பிறந்தபின் பல போராட்டங்களின்போது என்னை என் தாயும், தந்தையும் அழைத்துச் சென்றுள்ளார்கள். என்னுடைய தாய் ஷியாமலா என்னையும், என் சகோதரி மாயாவையும் வளர்த்து நம்பிக்கையூட்டினார். இந்தப் போராட்டம் நமக்கானது அல்ல, ஒவ்வொரு அமெரிக்க மக்களின் தலைமுறைக்கானது, தொடர்ந்து நடைபோட வேண்டும் என்று தெரிவித்தார்.
என் தாய் அடிக்கடி என்னிடம், ஏதாவது செய் எனச் சொல்வார். அவரின் வார்த்தையைக் கேட்டு ஏதாவது செய்தேன். ஆம், அவரின் வார்த்தையைக் கேட்டு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகச் சேர்ந்து சட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஒரேமாதிரியான நீதி கிடைக்கப் போராடினேன்.
எனக்கு 30 வயதானபோது அமெரிக்க நீதிபதி முன் முதல் முறையாக வாதிட நின்றபோது, ஆழ்ந்து மூச்சை இழுத்துக்கொண்டு, எனது வாழ்நாள், தொழில் அனைத்தும் இந்த மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்றேன்.
மாவட்ட அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பல்வேறு மக்களுக்காக நான் போராடியிருக்கிறேன், உதவியிருக்கிறேன். துப்பாக்கி, போதை மருந்து, மனிதர்களைக் கடத்தும் அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அட்டர்னி ஜெனரலாக வாதிட்டேன்.
நான் கலிபோர்னியா செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்க மக்களுக்காக அதிபர் ட்ரம்ப் அரசு நம்பகத்தன்மையுடன் , பொறுப்புடன் நடக்க வேண்டும் என்பதற்காக நாள்தோறும் குரல் கொடுத்திருக்கிறேன். நான் மட்டுமல்ல ஜோ பிடனும் சேர்ந்து வெள்ளை மாளிகையுடன் போரிட்டுள்ளார்''.
இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT