Published : 12 Aug 2020 08:08 AM
Last Updated : 12 Aug 2020 08:08 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்து அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடனே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான நெருக்கடிகள், அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஆப்பிரிக்கவைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது கறுப்பின மக்களின் வாக்குகளைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும், சான் பிரான்ஸிக்கோவின் மாவட்ட அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும் கமலா ஹாரிஸின் பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக இனவெறித்தாக்குதல், போலீஸாரின் அடக்கு முறைக்கு எதிராக கமலா ஹாரிஸ் கடுமையாக குரல் கொடுத்தார்.
இது நாள்வரை அமெரிக்க வரலாற்றில் அதிபராகவோ அல்லது துணை அதிபராக எந்த அமெரிக்கப் பெண்ணும் இருந்ததில்லை. அதிலும் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றதில்லை. கடந்த 1984-ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜெரால்டைன் பெராரோ, 2008-ல் சாரா பாலின் இருவரும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.
அமெரிக்காவின் ஒக்லாந்தின் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியப் பெண் அதிலும் குறிப்பாக தமிழரான ஷியாமளா கோபாலுக்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ் கடந்த 2003-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்ஜெனரல் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றார்.
அதன்பின் 2010-ம் ஆண்டில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு கலிபோர்னியா செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டு அவரின் பேச்சும், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த கேள்விகளும் அவரின் பக்கம் கவனத்தை ஈர்த்தன.
கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பூர்வீகத்தில் ஒரு தமிழ் பெண். கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா பி.வி.கோபலன் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த ஜாம்பியாவுக்கு நிர்வாகப் பணிக்கு அனுப்பப்பட்டார்.
பி.வி. கோபாலின் மகள் ஷியாமளா கோபாலன். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஷியாமளா கோபாலன், நியூட்ரிசியன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றினார்.
இல்லிநாய்ஸ், வி்ஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மார்க்கப்புற்று நோய் ஆய்வாளராக ஷியாமளா கோபாலன் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஷியாமளா கோபாலன் உயிரிழந்தார்.
தமிழ் பாரம்பரியத்தையும், இந்தியக் கலாச்சாரத்தையும் மறக்கக்கூடாது என்பதற்காவே ஷியாமளா கோபாலன், தனது மகளுக்கு கமலா எனப் பெயரிட்டார்.
சமீபத்தில் ஒரு செய்திசேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கமலா ஹாரிஸ் பேசுகையில் “ என்னுடைய வாழ்க்கையில் , உலகில் மிகவும் முக்கியமானவர் என்னுடைய தாத்தா பி.வி.கோபாலன் ” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT