Published : 08 Jul 2020 08:42 AM
Last Updated : 08 Jul 2020 08:42 AM
கரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது
உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது.
கரோனா வைரஸை பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை கடுமையாகச் சாடி வரும் அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அளித்துவரும் நிதியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து விரைவில் வெளியேறுவோம் என்று தெரிவித்திருந்தார். அதை இப்போது அதிகாரபூர்வமாகச் அமெரிக்கா செய்துள்ளது
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ் அந்நாட்டைவிட அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திய சேதம் மிகப்ெபரியது. இதில் அமெரிக்காவில் மட்டும் 30 லட்சம்பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர், 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் சந்தையில் கரோனா வைரஸ் உருவாகவில்லை, அது ஆய்வகங்களில் உருவானது என்று அமெரிக்க நாளேடுகள் செய்தி வெளியிட்டன. இதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப்பும், சீன ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதுதான் கரோனா வைரஸ் அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானன் டெட்ராஸ் சீனாவுடன் கூட்டு சேர்ந்து, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்தார்
இதையடுத்து, உலக சுகாதாரஅமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைப்பதாகவும், விரைவில் அந்த அமைப்பிலிருந்து அமெரி்க்கா வெளியேறும் என அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.
உலக சுகாதார அமைப்புக்கு அதிகபட்ச நிதியளித்து வரும் நாடாக அமெரிக்கா இருந்து வரும் நிதியுதவியை நிறுத்தியது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் நெருக்கடியாக மாறியது.ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக அமெரி்க்கா 45 டாலர்களை அளித்து வருகிறது. சீனா 4 கோடி டாலர்கள் மட்டுமே நிதியுதவி அளிக்கிறது
இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பிலருந்து முறைப்படி வெளியேறுவதற்கான பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அதற்கான கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா அளித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளருக்கான செய்தித்தொடர்பாளர் ஸ்டானே துஜாரிக் கூறுகையில் “ உலக சுகதாார அமைப்பிலிருந்து அடுத்த ஓர் ஆண்டில் வெளியேறுகிறோம் என்பதற்கான முறைப்படியான கடிதத்தை அமெரி்க்கா ஜூலை 6, 2020-ல் வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டு ஓர் ஆண்டில் அதாவது 2021-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி நடைமுறைக்கு வரும். உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான அனைத்து நடைமுறைகளும், விதிகளும் சரியாக இருக்கிறதா என்பதை பொதுச்செயலாளர் ஆய்வு செய்வார்” எனத் தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அறிவிக்கையில் “ வரும் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற அமெரிக்கா அளித்துள்ள நோட்டீஸை திரும்பப் பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT