Last Updated : 21 Jun, 2020 09:46 AM

1  

Published : 21 Jun 2020 09:46 AM
Last Updated : 21 Jun 2020 09:46 AM

பேசி வருகிறோம்; எல்லைப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா -சீனாவுக்கு உதவுவோம்: அதிபர் ட்ரம்ப் பேட்டி

பிரதமர் மோடி, சீன அதிபர்ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்,

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் இந்தியா, சீன ராணுவத்தினரிடேயே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும், தீர்க்கவும் இந்திய -சீன நாடுகளுக்கு அமெரிக்கா உதவும். அதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன ராணுவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை வெளிப்படையாக அறிவிக்க சீன ராணுவம் மறுக்கிறது. ஆனால், சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க சீன, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று வாஷிங்டனில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, இந்திய, சீன எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து இருப்பது குறித்துக் கேள்வி எழுப்பினர் அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில், “ இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினையால் பதற்றம் அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது.

இது மிகவும் கடினமான சூழல். நாங்கள் இந்தியாவிடமும் பேசி வருகிறோம். சீனாவிடமும் பேசி வருகிறோம். அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. இரு நாடுகளிடையே நல்ல சூழல் நிலவவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வோம். எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் சீனா, இந்தியாவுக்கு உதவுவோம். அதற்காக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாகவே அமெரிக்கா தொடரந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. கரோனா வைரஸ் சிக்கலில் நாடுகள் இருக்கும்போது, இந்தியாவிடம் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிடமும் எல்லைப் பிரச்சினையை சீனா தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிடம் தொடர்ந்து எல்லைப் பதற்றத்தை சீனாவின் மக்கள் சுதந்திர ராணுவம் உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தெற்கு சீனக் கடல் பகுதியிலும் சட்டவிரோதமாக பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்து, சிறிய நாடுகளுக்குத் தொல்லை கொடுக்கிறது என்று அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய மற்றும் சீனாவுக்கான 2020 ஆம் ஆண்டு சவால்கள் என்ற மாநாட்டில், சீனாவைக் கடுமையாக விமர்சித்தார். சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மூர்க்கத்தனமாக நடக்கிறது என்று விமர்சித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x