Last Updated : 17 Jun, 2020 12:32 PM

 

Published : 17 Jun 2020 12:32 PM
Last Updated : 17 Jun 2020 12:32 PM

மீ்ண்டும் கரோனா பரவல் அச்சம்: பெய்ஜிங்கில் 1,200 விமானங்கள் ரத்து; பல்வேறு பகுதிகளில் லாக்டவுன் பிறப்பிப்பு

விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பெய்ஜிங் விமான நிலையத்தில் குழுமிய மக்கள்.

பெய்ஜிங்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா வைரஸ் பரவும் அச்சம் சூழ்ந்ததால், அங்கிருந்து புறப்பட வேண்டிய 1,200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மக்களுக்குப் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ள சீன அரசு, இதுவரை 90 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்துள்ளது. அதில் பெய்ஜிங்கில் மட்டும் புதன்கிழமை வரை 137 பேருக்கு அறிகுறிகளுடன் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் அறிகுறி இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதியிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்குச் சென்று வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெய்ஜிங்கில் நிலைமை மோசமடைந்துவிடும், வூஹானைப் போன்று மற்றொரு நோய் திரளாக பெய்ஜிங் மாறிவிடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனையை சீன அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பெய்ஜிங்கில் கரோனா வைரல் பரவல் தீவிரமாகும் என்ற அச்சத்தால் இன்று பெய்ஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்படும் 1,235 உள்நாட்டு, சர்வதேச விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் எந்தவிதமான பிடித்தமும் இன்றி டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. இதேபோல ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெய்ஜிங்கில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் நூலகங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் 30 சதவீதத்துக்கும் மேல் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் லாக்டவுன் போடப்பட்டு மக்கள் வெளியே செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் இருந்து பெய்ஜிங் நகருக்கு வரவும் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு யாரும் செல்லக்கூடாத இடமாக பெய்ஜிங் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற நகரங்களில் இருந்து பெய்ஜிங் நகருக்கு வந்துள்ள மக்கள் மீண்டும் தங்கள் நகரங்களுக்குச் சென்றால் தனிமைப்படுத்தப்படுவோம் என அஞ்சி பெய்ஜிங் நகரிலேயே தங்கியுள்ளார்கள்.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “பெய்ஜிங்கில் இன்று புதிதாக 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேருக்கு அறிகுறியில்லாமல் கரோனா தொற்று இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 137 பேருக்கு கரோனா தொற்று உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x