Published : 15 Jun 2020 12:25 PM
Last Updated : 15 Jun 2020 12:25 PM
கரோனா வைரஸ் பீதி, பொருளாதார மந்தநிலை, இயற்கைச் சீற்றங்கள் என மக்கள் அச்சத்தில் இருக்கும்போது மாயன் காலண்டர் குறித்த பரபரப்புச் செய்தி மீண்டும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன.
மாயன் காலண்டர்படி வரும் 21-ம் தேதிதான் உலகின் கடைசி நாள் என்று கூறியதைச் சுட்டிக்காட்டி விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே இதேபோன்ற செய்தி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுந்தது. பின்னர் அது பொய்யானது. சதிக்கோட்பாட்டாளர்கள் கணக்கின்படி, மாயன் காலண்டரில் கூறியபடி ஜூன் 21-ம் தேதி கடைசி நாள். அன்றைய தேதியுடன் உலகம் அழிந்துவிடுமா என்று விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டதாகக் கூறப்படும் மாயன் இனத்தினர், முதல் மனித நாகரிக இனத்தினர் என்று கூறப்படுகிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் இனத்தவர்கள் வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச்சிறந்து விளங்கினர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரைத் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது.
.
சித்திர எழுத்து வடிவம், கலை, கட்டிடக் கலை, கணிதம், நாட்காட்டி மற்றும் வானியல் ஞானம் ஆகியவற்றுக்காக மெதோமெரிக்கன் நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.
மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி வரும் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த காலண்டர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வரும் முன் உலகில் பல்வேறு வகையான காலண்டர்கள் காலத்தைக் குறிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானது மாயன் காலண்டர், ஜூலியன் காலண்டர்.
சூரியனை பூமி சுற்றிவரும் காலத்தை அடிப்படை வைத்து கிரிகோரியன் காலண்டர் வடிவமைக்கப்பட்டது. இதைத்தான் அறிவியல் வல்லுநர்களும் அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால், கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தும்போது, ஜூலியன் காலண்டரின் 11 நாட்களைக் கணக்கிடவில்லை. இழந்த அந்த நாட்களை வைத்துக் கணக்கிட்டால் ஜூலியன் காலண்டர்படி நாம் 2020 ஆம் ஆண்டில் இருக்கவில்லை. 2012-ம் ஆண்டில்தான் இருக்கிறோம் என்று சில வானியல் கணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஜூலியன் காலண்டரை நாம் பின்பற்றும்போது அந்த காலண்டர்படி நாம் இப்போது 2012-ம் ஆண்டில்தான் இருக்கிறோம். ஜூலியன் காலண்டரில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு மாறும் ஆண்டு ஓராண்டில் 11 நாட்களைக் குறைத்துக் கணக்கிட்டுள்ளோம்.
அதாவது கடந்த 1752-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் பயன்பாட்டுக்கு வந்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து 1752 ஆம் ஆண்டைக் கழித்தால் ஏறக்குறைய 268 ஆண்டுகளாக நாம் 11 நாட்களைக் கணக்கிடவில்லை.
அப்படியென்றால் 11 x 268 பெருக்கினால் 2,948 நாட்களைச் சேர்க்க வேண்டும். 2,948 நாட்களை 365 நாளில் வகுத்தால் (365 நாட்கள் - ஓராண்டு) 8 ஆண்டுகள் கிடைக்கிறது. அதாவது 8 ஆண்டுகளை நாம் கணக்கிடவில்லை. அதாவது தற்போது இருக்கும் 2020-ம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளைக் கழித்தால் 2012-ம் ஆண்டு. ஜூலியன் காலண்டர் படி நாம் தற்போது 2012-ம் ஆண்டில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி 2012, டிசம்பர் 21-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டர் கோட்பாட்டின்படி கணக்கில் வரும் 21-ம் தேதிதான் மாயன் காலண்டர் குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ம் தேதியாகும். இதனால் மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் தேதியா என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே இதுபோன்று கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் வெளியாகி அது பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் இப்போது அதே கோட்பாடு வலம் வரத் தொடங்கியுள்ளது.
இதுகறித்து நாசா விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், “ஏற்கெனவே இதபோன்று உலகம் அழியப்போகிறது என்று சுமேரியர்களால் முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின் 2003-ம் ஆண்டு அழியும் என்றும், 2012-ம்ஆண்டு அழியும் என்று மாயன் காலண்டரைச் சுட்டிக்காட்டினார்கள். எதுவும் நடக்கவில்லை. இப்போது 2020-ம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள்” என மறுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT