Published : 12 Jun 2020 11:44 AM
Last Updated : 12 Jun 2020 11:44 AM
கரோனா வைரஸ் லாக்டவுனால் அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலையின்மையைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசாக்களை வழங்குவதை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹெச்1பி விசா மூலம் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மென்பொறியாளர்கள்தான் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்கின்றனர். இந்த விசா வழங்குவதை அமெரிக்கா குறைத்தால், இந்திய ஐடி பொறியாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இது தொடர்பாக அமெரிக்காவில் வெளியாகும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்ட செய்தியில், “அமெரிக்காவில் தற்போது ஹெச்1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. விசா வழங்கும் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் முடிவு நிதியாண்டான அக்டோபருக்கும் நீட்டிக்கப்படலாம். இதன்படி எந்த வெளிநாட்டினரும் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்குள் வந்து பணியாற்றத் தடை செய்யபப்டுவார்கள். ஏற்கெனவே இந்த விசாவில் பணியாற்றுவோர் பாதிக்கப்படமாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப நிர்வாகம் ஒருவேளை இந்த முடிவை தீவிரப்படுத்தினால், அது இந்திய ஐடி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்கெனவே ஹெச்1பி விசா மூலம் பணிக்கு அமெரிக்கா செல்ல இருந்த ஏராளமான இந்தியர்கள் பணியை இழந்துவிட்டனர். இந்தஉத்தரவும் நடைமுறைக்கு வந்தால் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஹெச்1பி விசா தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. ஆனால், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தி வருகிறோம். குறிப்பாக அதிகரிக்கும் வேலையின்மையைக் குறைப்பது, அமெரிக்க மக்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வது, சமூகத்தில் கடைமட்டத்தில் இருப்போருக்கு வேலை வழங்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
ஹெச்1பி விசாவுக்கு கட்டுப்பாடு கொண்டுவரும் பட்சத்தில் அது ஹெச்2பி விசா, ஜே-1 விசா, எல்-1 விசா போன்றவற்றுக்கும் இது பொருந்தும். அந்த விசாவில் வரக் காத்திருப்போரும் பாதிக்கப்படுவார்கள் என்று நாளேடு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT