Published : 30 May 2020 03:30 PM
Last Updated : 30 May 2020 03:30 PM
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குத் தடை விதிக்கும் திட்டம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது இனரீதியான நடவடிக்கை, வெட்கப்பட வேண்டிய அரசியல் துன்புறுத்தல், பனிப்போரின் வீரியத்தை அதிகப்படுத்தும் என்று சீனா பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து கரோனா வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காதான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அந்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 17 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து உருவானது. சந்தையில் உருவாகவில்லை என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஏற்கெனவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கரோனா வைரஸ் விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவுக்கு எதிராக பல்வேறு வகையான வரிகளை விதிக்கப்போவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டி வருகிறார். மேலும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் நடக்கும் கிளர்ச்சியிலும் அமெரிக்கா தலையிட்டு கருத்து தெரிவித்து வருகிறது. இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்கள், சீன அதிகாரிகள் மீது தடை விதித்து அவர்களின் விசாவை ரத்து செய்யும் திட்டம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் மிரட்டும் வகையில் பேசியிருந்தார்.
இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜான் பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''இரு நாட்டு மக்களுக்கு இடையே செய்யப்படும் பரிமாற்றங்கள் பெரும்பாலும் அமெரிக்காவால் விமர்சிக்கப்படுகின்றன. இது வெளிப்படையான மற்றும் தாராளவாதத்தின் வெளிப்பாடகவும், அதன் போதனையாகவும் இருக்கிறது.
அமெரிக்க அதிபரின் பேச்சு என்பது ஆழ்ந்த பனிப்போருக்கு இட்டுச் செல்வதையும், சில அமெரிக்கர்களின் சுயநலமான போக்கையும் குறிப்பிடுகிறது.
அமெரிக்காவில் கடந்த 1950களில் இருந்த மெக்கார்த்திஸம் மீீண்டும் வந்துவிட்டதா என்று வியக்கத் தோன்றுகிறது. (மெக்கார்த்திஸம் என்பது அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் மக்களை ஒடுக்கி, அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து பணி, வாழும் சூழல் ஆகியவற்றைப் பறிப்பதாகும்). அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களின் சட்ட உரிமையைப் பறிக்கும் வேலையில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது.
அமெரிக்காவின் இந்தச் செயல்பாடு இனரீதியான நடவடிக்கை மற்றும் வெட்கத் தலைகுனியவைக்கும் அரசியல் துன்புறுத்தலாகும். ஆனால் அமெரிக்காவில் உள்ள சில தலைவர்கள் அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களையும், மக்களையும் பாதுகாப்போம். அவர்கள் அமெரிக்கக் கல்விக்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு ஜாவோ லிஜான் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT