Published : 21 Apr 2020 09:22 AM
Last Updated : 21 Apr 2020 09:22 AM
கரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, அமெரிக்காவில் குடியேறும் பிறநாட்டினரைத் தற்காலிகமாகத் தடுக்க விரைவில் நிர்வாகரீதியான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் மோசமான உயிரிழப்புகளையும், மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 7.92 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர், 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
கரோனா வைரஸ் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மையையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2.2 கோடி மக்கள் வேலையின்மை உதவித்தொகைக்கு அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வேலையின்மை அளவு அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஹெச்1பி விசா மூலம் இந்தியர்களும், சீனர்களும் அதிகமான அளவில் பணியாற்றுகின்றனர். அதிபர் ட்ரம்ப் தனது தொடக்க காலத்திய முழக்கத்தை மீண்டும் கையிலெடுத்து அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே என்று பேசியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை அமெரிக்க மக்களுக்கு வழங்கும் வகையில் , பாதுகாக்கும் வகையில் ஹெச்1பி விசாவையும், குடியேறுபவர்களையும் தற்காலிகமாகத் தடை செய்ய நிர்வாகரீதியாக உத்தரவு பிறப்பிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்த உத்தரவு எப்போது கையொப்பமாகும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதல், அமெரிக்காவின் பெருமைவாய்ந்த குடிமக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் இருக்கிறேன். அமெரிக்காவில் குடியேறும் மக்களைத் தற்காலிகமாகத் தடை செய்யும் நிர்வாக ரீதியான உத்தரவை விரைவில் பிறப்பிக்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்காவின் தெற்கு, வடக்கு எல்லைகளை அதிபர் ட்ரம்ப் மூடி சட்டவிரோதமாக வரும் குடியேறிகளைத் தடுத்துவிட்டார். இந்தியா உள்பட பல நாடுகளிலும் தூதரக சேவை நிறுத்துப்பட்டு, பயணக் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது.
எச்1பி விசா வழங்குவதில் இந்தியர்கள் ஏற்கெனவே பல்வேறு பின்னடைவுகளையும், பிரச்சினைகளையும் சந்தித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT