Published : 18 Apr 2020 08:01 AM
Last Updated : 18 Apr 2020 08:01 AM
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கரோனா வைரஸ் உயிரிழப்புகளை விட பொருளாதாரம் பெரிது, அதைவிடவும் பெரிது வரவிருக்கும் அதிபர் தேர்தல் என்று அமெரிக்காவில் ட்ரம்பின் பதவி வெறி, ‘நார்சிசம்’ குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ஜனநாயகக் கட்சி கவர்னர்கள் லாக்-டவுன் உத்தரவுகளைப் பிறப்பித்திருகும் மிச்சிகன், மினசோட்டா, வர்ஜீனியா ஆகிய மாகாணங்களை திறந்து விடுங்கள் என்று செய்த ட்வீட்டினால் அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
‘லிபரேட் மினசோட்டா, லிபரேட் மிச்சிகன், லிபரேட் வர்ஜீனியா, உங்கள் 2வது திருத்தத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த மூன்று மாகாணங்களிலும், அதாவது மினசோட்டா, மிச்சிகன், வர்ஜீனியா ஆகியவற்றில் லாக்டவுனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த 3 மாகாணங்களிலும் கவர்னர்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள், எனவே இங்கு மக்களை ட்ரம்ப் தூண்டி விடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ ட்ரம்ப்பின் பொருளாதார கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ட்ரம்புக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
10,000 பேர்களுக்கும் மேல் நியூயார்க்கில் மரணமடைந்துள்ளனர், வைரஸ் மையமாகத் திகழ்கிறது நியூயார்க். கியூமோவைத் தாக்கிய ட்ரம்ப், வெளியே வாருங்கள், பணியாற்றுங்கள் என்று கூற அதற்கு பதிலடியாகக் கியூமோ, “அவர் (ட்ரம்ப்) வீட்டில் இருந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தால் அவர் எழுந்து வெளியே வந்து பணியாற்ற வேண்டும்” என்று கடும் பதிலடி கொடுத்துள்ளார்..
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 40க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வீடடங்கு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் 95% லாக்-டவுனில் உள்ளனர்.
இந்நிலையில் ட்ரம்ப்பின் ட்வீட்கள் போராட்டங்களைத் தூண்டுவதாக கவர்னர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மிச்சிகன் கவர்னர் கிரெட்சென் விட்மர், ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல், “நிறைய பதற்றம் இருக்கிறது, எந்த ஒரு நபரும் அதற்குரிய முஸ்தீபுகல் இருந்தால் மக்களை என்ன வேண்டுமானாலும் தூண்டலாம். பாதுகாப்பு எய்தியவுடன் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்றார்.
வர்ஜீனியா மாகாண ஆளுநர் இன்னும் தெளிவாக, துல்லியமாகக் கூறும்போது, “நாங்கள் உயிரியல் போரை எதிர்கொண்டு வருகிறோம், இப்படிப்பட்ட பிதற்றலான ட்வீட்களுக்கெல்லாம் பதில் கூறும் ட்வீட் போர்களை அல்ல” என்றார் நறுக்கென்று.
மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் கூறும்போது, “முதலில் மக்களைக் காப்பாற்றுவதுதான் பொறுப்பு” என்றார் நாசுக்காக.
வாஷிங்டன் கவர்னர் ஜேய் இன்ஸ்லீ கொஞ்சம் காட்டமாகவே ட்ரம்புக்கு பதிலளித்தார், “அதிபரின் கருத்துக்கள் சட்ட விரோத மற்றும் அபாயகரமான செயல்களை ஊக்குவிக்கிறது மீண்டும் லட்சக்கணக்கானோரை கோவிட்-19க்கு இரையாக்கப் பார்க்கிறார்.
இப்படி ட்வீட் செய்வது வன்முறைக்கே வழிவகுக்கும். ட்ரம்ப் உள்நாட்டு கலகத்தைத் தூண்டுகிறார், பொய்களை பரப்பி வருகிறார். கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு முன்னால் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றார்.
ட்ரம்ப் கூற்று ஏன் கலகத்தைத் தூண்டுவதாகப் பார்க்கப்படுகிறது என்றால் ‘2வது சட்டத்திருத்தத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டது, அமெரிக்கர்கள் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமையைக் குறிப்பதாகும்.
மிச்சிகனில் சுமார் 3000 வலதுசாரிகளில் சிலர் ஆயுதங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர், கரோனா வைரஸின் தன்மை புரியாமல் இவர்கள் ‘அதீத தனிமைப்படுத்தல்’ என்று ஆவேசப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT