Last Updated : 14 Apr, 2020 04:54 PM

3  

Published : 14 Apr 2020 04:54 PM
Last Updated : 14 Apr 2020 04:54 PM

அமெரிக்க மக்களை அழிக்க முடிவெடுத்து விட்டாரா? - லாக்-டவுனை நீக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்: காற்றில் பறந்த உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷி்ங்டன்,

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை விரைவில் நீக்கும் வகையில் முழுமையான திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸின் மையப் பிடிக்குள் சிக்கி அமெரிக்கா நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறது, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து அந்த நாடுமுழுமையாக மீளவில்லை.இதுபோன்ற நேரங்களில் லாக்டவுனை நீக்குவதே ஆபத்தானது, அதிலும் பாதிப்பில்லாத இடங்களில் கூட படிப்படியாக நீக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கையை அதிபர் ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் பேசியிருக்கிறார்.

கரோனா வைரஸின் ஆபத்துகள், வீரியம் ஆகியவை குறித்து ஜனவரி மாதத்திலிருந்து உளவுத்துறை, மருத்துவ உளவுத்துறை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கை செய்தும் அதிபர் ட்ரம்ப் மெத்தனமாக செயல்பட்டார் என்று தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதில் தி நியுயார்க் டைம்ஸ் நாளேடு புலனாய்வு செய்து கடந்த வாரம் பெரிய செய்தியும் வெளியி்ட்டது. அமெரிக்காவின் பொருளாதாரத்தின் நலன் மீதுதான் ட்ரம்ப் அக்கறை வைக்கிறார், மக்கள் மீது அல்ல என்று நாளேடுகள் குற்றம்சாட்டியதை ட்ரம்ப் செயல்கள் உறுதிப்படுத்துகின்றன

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கரோனாவுக்கு 1,535 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக அமெரிக்காவில் சராசரியாக 1800 பேருக்கு மேல் நாள் தோறும் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 640ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்ட எந்த நாட்டிலும் இதுவரை இதுபோன்ற உயிரிழப்புகள் இருந்ததில்லை.
கரோனாவில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 5.87 லட்சமாக அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் 6 லட்சம் பேர் பாதிப்பை அமெரிக்கா எட்டிவிடும்.

அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு பலியானவர்களில் பெரும்பாலானொர் நியூயார்க்கையும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு நியூயார்க் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவின் பொருளாதார மைய நகராகவும், வர்த்தக நகராகவும் இருப்பது நியூயார்க். அங்கு மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள். நியூயார்க் மட்டுமல்ல, அமெரிக்காவின் 95 சதவீத மக்களும் வீட்டுக்குள் இருக்கிறார்கள், ஏப்ரல் 30் வரை சமூக விலகலை கடைபிடிக்க வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால் பொருளாதாரம் முடங்கி இருப்பதை அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மக்களின் உயிர்களைக் காட்டிலும் பொருளாதாரத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்ற சந்தேகத்தை உருவாக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி இருந்தது. அவர் கூறியதாவது:

பல வல்லுநர்களுடனும், என்னுடைய குழுவுடனும் நான் ஆலோசனை நடத்தினேன். அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுனை நீக்குவதற்கான முடிவெடுப்பதில் நெருங்கிவிட்டோம். அதற்கானதிட்டங்களை வகுத்து வருகிறோம், மே மாதம் முதல்வாரத்தில் அமெரி்க்கா முழுமையாக திறக்கப்படும்.

மாகாணங்களை பாதுகாப்பாக நிர்வாகம் செய்வது, கரோனாவிலிருந்து பாதுகாக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆளுநர்களுக்கு வழங்கப்படும். என்னுடைய நிர்வாகத்தின் திட்டமிடல் அமெரிக்க மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கையைத் தரும், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவது அவசியம்” எனத் தெரிவித்தார்

கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப 18 மாதங்கள் வரைகூட ஆகலாம் என அந்நாட்டு பெடரல் வங்கி தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் கரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் அடுத்த மாதத்தில் கட்டுப்பாடுகளை நீக்கப்போவதாக ட்ரம்ப் பேசியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் இன்று அளித்த பேட்டியில், “ ஸ்வைன் ஃப்ளூ வைரஸைவிட 10 மடங்கு கொடியது, ஆபத்தானது கரோனா வைரஸ். அதிவேகமாகப் பரவும் ஆனால் மெதுவாகத்தான் கட்டுக்குள் கொண்டுவர முடியும். கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தாலும், பாதிக்கபட்ட நாடுகள் உடனடியாக லாக்டவுன் கட்டுப்பாடுகளை நீக்கக்கூடாது. படிப்படியாகத்தான் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த இடங்களில் கரோனா மீள் எழுச்சி பெற்று பேரழிவுகளை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

ஆனால், உலக சுகாதார அமைப்பையும் மீறி அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் விளையாட அதிபர் ட்ரம்ப் துணிந்துவிட்டாரா எனும் கேள்வி எழுகிறது. உலக சுகாதாரஅமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று பகீர் குற்றச்சாட்டு சுமத்திய ட்ரம்ப், நிதி வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்தார். இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் மீது வெறுப்புடன் இருக்கும் ட்ரம்ப் அந்த அமைப்பின் அறிவுரைகளும் , எச்சரிக்கைகளையும் நிச்சயம் காற்றில் பறக்கவிடுவார்.

வெள்ளை மாளிகையின் கணப்பிலும், அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு தலைமை மருத்துவர் பாஸியின் கணிப்பின்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் கரோனா மக்கள் உயிரிழக்க நேரிடும் என அச்சம் தெரிவித்திருந்தார். அதை செயல்வடிவத்தில் செய்துகாட்டும் விதத்தில்தான் ட்ரம்பின் பேச்சு அமைந்துள்ளது

பிடிஐ தகவல்களுடன்...........

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x