Published : 02 Mar 2020 07:10 AM
Last Updated : 02 Mar 2020 07:10 AM

இந்திய பயணம் பயனுள்ளதாக இருந்தது; பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர், தலைவர்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு

கொலம்பியா

இந்திய பயணம் பயனுள்ளதாக இருந்தது என்றும் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த தலைவர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் மகள் இவான்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி 2 நாள் அரசு முறை பயணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்துக்கே சென்று ட்ரம்பை வரவேற்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சபர்மதி ஆசிரமம் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று வரவேற்றனர்.

பின்னர் சர்தார் வல்லபபாய் படேல் விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ட்ரம்பும் மோடியும் பேசினர்.

அன்றைய தினம் மாலை ஆக்ரா சென்ற ட்ரம்ப் தாஜ்மகாலை பார்வையிட்டார். அடுத்த நாள் 25-ம் தேதி ட்ரம்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். பின்னர், ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அமெரிக்காவின் சவுத் கரோலினா மாகாணம் கொலம்பியா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் 1.29 லட்சம் பேர் அமரக்கூடிய மிகப்பெரிய விளையாட்டரங்கம் உள்ளது. அதைப் பார்த்தீர்களா? அதில் நடந்த நிகழ்ச்சியில் நானும் பிரதமர் மோடியும் பங்கேற்றபோது 1 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.

இங்கும் பெரிய கூட்டம் கூடி உள்ளது. பொதுவாக எனக்கு கூடும் கூட்டத்தைப் பற்றி நான் பேசுவேன். ஏனெனில், மற்றவர்களைவிட எனக்கு அதிக கூட்டம் கூடுகிறது. எனினும், இந்தியாவில் பெரிய கூட்டத்தைப் பார்த்துவிட்டேன். அதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இனி எந்தக் கூட்டத்தைப் பார்த்தும் பிரம்மிப்படைய மாட்டேன்.

பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர். சிறந்த தலைவர். இந்திய மக்கள் அவரை நேசிக்கின்றனர். இந்தப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x